×

இந்தி திணிப்பை ஏற்க முடியாது பாஜ மீது ஓபிஎஸ் திடீர் பாய்ச்சல்: மவுனம் காக்கிறார் எடப்பாடி

சென்னை: இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென பாஜவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கிறார். அதேநேரத்தில் இந்த விஷயத்தில் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காமல் எடப்பாடி பழனிசாமி மவுனம் காத்து வருகிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய அமைச்சரவைக்கான 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தி மொழியில்தான் தயாரிக்கப்படுகிறது என்றும், மற்ற மொழிகளை பேசும் மாநில மக்கள் இந்திய மொழியில் பேச வேண்டுமென்றும், ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை  ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் நாடாளுமன்ற ஆட்சிமொழி குழுவின் தலைவர் என்ற முறையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பதாக பத்திரிகைகளில்  செய்திகள் வந்துள்ளன.

இந்தி மொழி தேவை என்கிற பட்சத்தில், இந்தி மொழியை  தாங்களாகவே மனமுவந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக  கற்றுக் கொள்ளலாம் என்றும், அதே சமயத்தில் இந்தி திணிப்பு என்பதை ஏற்றுக்  கொள்ள முடியாது என்றும் அண்ணா கூறி இருக்கிறார். நீண்ட நாட்களாக தமிழ்நாட்டில் இருமொழி கொள்கைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று வரை இந்தியாவில் ஆங்கில மொழி இருக்கிறது என்றால் அதற்கு மூல காரணம் அண்ணா. அண்ணாவின்  இருமொழி கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கிறது என்பதையும், தேசிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோதே அதிமுகவின் நிலைப்பாடு தெளிவாக்கப்பட்டு விட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று, ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பதிவில் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘அண்ணா கூறியவாறு, இந்தி மொழி தேவையெனும் பட்சத்தில் மனமுவந்து கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் கற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அண்ணா வழியில் இருமொழி கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது’’ என்று கூறி உள்ளார். அதேநேரம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இந்த விஷயம் குறித்து இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Edappadi , Hindi dump can not accept OPS sudden leap on Bajaj: Edappadi keeps silent
× RELATED கச்சா எண்ணெய் விலை குறைந்தும்...