×

பக்தர்கள் மூலவரை படம் பிடிப்பதால் பழநி மலைக்கோயிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை குறித்து ஆய்வு: அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டி

பழநி: திபழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பழநியாண்டவர் கலை, பண்பாட்டு கல்லூரி மைதானத்தில் ரூ.16.50 லட்சத்தில் நடைமேடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து மலைக்கோயிலுக்கு சென்று உச்சிகால பூஜையில் கலந்து கொண்டார். பின், கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்தார். இதில் அமைச்சர் அர.சக்கரபாணி, பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் விசாகன் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டியில், பழநிகோயிலில் 2வது ரோப்கார் 2 ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ஆன்மிகவாதிகள், அதிக திருப்பணிகள் மேற்கொள்பவர்கள் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் இறை நாட்டமுள்ளவர்கள் அறங்காவலர்களாக நியமிக்கப்படுவர். இதற்காக நியமிக்கப்பட்ட குழுக்களின் மூலம் விரைவில் அறங்காவலர் நியமிக்கும் பணி துவங்கும். பழநி கோயிலுக்கு வரும் ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் மூலவர் சிலைக்கு சீதாபந்தனம் செய்ய வேண்டுமென கோயில் அர்ச்சகர்கள் அரசிற்கு முறையிட்டுள்ளனர். எனவே சீதாபந்தனம் செய்யப்பட்டபின் கும்பாபிஷேகம் நடத்தப்படும். பழநி கோயிலில் மூலவரை படம் பிடிப்பதை தடுக்க, தரிசனத்தின்போது செல்போன் கொண்டு வருவதை தடை செய்யும் வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

* 10 மாதத்தில் ரூ.2,500 கோடி கோயில் நிலங்கள் மீட்பு
தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் ஆய்வு செய்த பின் அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், ‘‘திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் ரூ 2,500 கோடி மதிப்புள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்கள் மீட்டு தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. தமிழக கோயில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட 872 சாமி சிலைகள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளது. தற்போது வெளிநாடுகளில் இருந்து மீட்ட 4 சிலைகள் டெல்லியில் வைக்கப்பட்டு உள்ளது. அவை விரைவில் தமிழகம் கொண்டு வரப்படவுள்ளது’’ என்றார்.

Tags : Palani hill temple ,Minister ,Charity ,Sekar Babu , Study on ban on cell phone use at Palani hill temple due to filming of devotees: Interview with Charitable Trusts Minister Sekar Babu
× RELATED தீ தொண்டு நாள் வார விழா