×

அரசு அதிகாரிகளை போல் நடித்து 60 அடி நீள இரும்பு பாலம் திருட்டு: பீகாரில் 3 நாட்களாக நடந்த கூத்து

சசராம்:  பீகாரில் 60 அடி நீளத்தில் இருந்த பழமை வாய்ந்த இரும்பு பாலத்தை வெட்டி எடுத்து மர்ம கும்பல் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம், நசிரிகன்ஞ் காவல் நிலையத்துக்குட்பட்ட அமியவார் கிராமத்தில் உள்ள அர்ரா கால்வாய் மீது இரும்பு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பாலம் கடந்த 1972ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 500 டன் எடை கொண்டதாகும். பாலம் வலிமை இழந்ததால் அது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தடை செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அரசு அதிகாரிகளாக தங்களை கூறிக்கொண்ட கும்பல் ஒன்று இந்த பாலத்தை ஆட்கள் மூலமாக வெட்டி எடுத்துள்ளது. கேஸ் கட்டர்கள் மற்றும் பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் 3 நாட்களில் இந்த பாலத்தை வெட்டி அந்த கும்பல் திருடி சென்றுள்ளது. இது குறித்து சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். அதற்குள்ளாக அந்த கும்பல் தப்பிச் சென்று விட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பாலத்தை திருடி சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

மேலும் பழைய இரும்பு பொருட்களை வாங்கும் கடைகளில் போலீசார் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், நீர்பாசன துறையில் இருக்கும் உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் தான் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர். இது குறித்து எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘‘திருடர்கள் முதல்வர் நிதிஷ் குமார்  மற்றும் பாஜ தலைவர்களால் ஈர்க்கப்பட்டுள்ளனர். பாஜ.வும் நிதிஷ்குமாரும் பீகாரை திருட முடியும் என்றால் பாலத்தை திருட முடியாதா?’ என கிண்டலாக விமர்சித்துள்ளார்.


Tags : Bihar , Theft of a 60-foot-long iron bridge pretending to be government officials: A 3-day koothu in Bihar
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!