×

நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்காமல் பாக். பிரதமர் இம்ரான் ராஜினாமா? காலை முதல் இரவு வரை நாடாளுமன்றத்தில் பரபரப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த கூடிய நாடாளுமன்றத்தில், காலை முதல் இரவு வரை பரபரப்பு நீடித்தது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இதன் மீதான விவாதம் ஏப்ரல் 3ம் தேதி நடக்க இருந்தது. இந்நிலையில், இம்ரான் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் விலக்கி கொண்டு, எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து கொண்டதால் இம்ரான் அரசு பெரும்பான்மை இழந்தது. ஆனால், இம்ரான் கான் தனது அரசுக்கு ஆதரவு இருக்கிறது. தனது அரசை கவிழ்க்க அமெரிக்கா சதி செய்வதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டை அமெரிக்காவும், பாக். ராணுவமும் மறுத்துவிட்டது.

ஏப்ரல் 3ம் தேதி நாடாளுமன்றம் கூடிய போது, அரசை கவிழ்க்க வெளிநாட்டு சதி நடப்பதால், நம்பிக்கையில்லா தீர்மானம் செல்லாது என்று துணை சபாநாயகர் காசி சுரி அறிவித்தார். இதையடுத்து, இம்ரான் கான் பரிந்துரையின் பேரில் அதிபர் ஆரிப் ஆல்வி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு மற்றும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கை தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியால் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்தது செல்லாது.  இம்ரான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை 10ம் தேதி (நேற்று) காலை நடத்த வேண்டும்,’ என்று அதிரடியாக அறிவித்தது. அதன்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்காக நாடாளுமன்றம் நேற்று காலை 10.30க்கு சபாநாயகர் அசாத் கைசர் தலைமையில் கூடியது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பேசுகையில், ‘துணை சபாநாயகரின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்து வழங்கிய தீர்ப்பு நாட்டின் எதிர்காலத்தை பிரகாசமாக்கி இருக்கிறது. நாடாளுமன்றம் இன்று வரலாற்றை எழுதும். அரசியலமைப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை இன்று நாடாளுமன்ற தோற்கடிக்கப் போகிறது. சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்காக சபாநாயகர் துணை நிற்க வேண்டும். உங்களுடைய பெயர் வரலாற்றில் பொன்னான வார்த்தைகளால் எழுத வேண்டும்,’ என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், ‘சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடவடிக்கைகளை மேற்கொள்வேன். ஆனால், வெளிநாட்டு சதி இருப்பதாக பேசப்பட்டது. இதுவும் விவாதிக்கப்பட வேண்டும்’ என்றார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். ‘வெளிநாட்டு சதி என்ற விவாதத்தை எடுத்தால், உச்ச நீதிமன்றம் உத்தரவை மீறிவதாகும்’ என கூறி நீதிமன்றம் உத்தரவை படித்து காட்டி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை மட்டுமே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி பேசுகையில், வெளிநாட்டு சதிக்கு ஆதாரம் இருப்பதாக தெரிவித்தார்.

ஆனால், அதை ஏற்று கொள்ளாத எதிர்க்கட்சிகள் உடனே வாக்கெடுப்பு நடத்த கோரி அமளியில் ஈடுபட்டன. இதனால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் அவையை பிற்பகல் 12.30 மணி வரை சபாநாயகர் கைசர் ஒத்திவைத்தார். இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்களின் குழு சபாநாயகர் கைசரை அவரது அறையில் சந்தித்து, ‘இம்ரான் கானின் தலைவிதிக்கு முத்திரை குத்தக்கூடிய நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும். இல்லையென்றால் இது இன்னொரு சட்ட மீறலாகும்’ என்று வலியுறுத்தியது. அவை மீண்டும் கூடியதும், வெளிநாட்டு சதி குறித்து விவாதம் தொடங்கியது.

இந்த விவகாரத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கலந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகள் உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டனர். பொதுவாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கும்போது அவையில் எவ்வளவு உறுப்பினர்கள் ஆஜராகி உள்ளனர் என்பதை பொறுத்து பெரும்பான்மை நிரூபிக்கப்படும். விவாதத்திற்கு பின் இரவு 8.00 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

அவை மீண்டும் கூடியதும், இம்ரான் கான் உடனான 30 ஆண்டுகள் நட்பு குறித்து சபாநாயகர் பேசினார். பின்னர், இப்தார் இடைவெளிக்காக மீண்டும் அவை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, நேற்றிரவு 9 மணிக்கு பிரதமர் இல்லத்தில் இம்ரான் கான் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், நாடாளுமன்றத்தில் பெருபான்மையை இழந்து விட்டதால் வாக்கெடுப்பை சந்திக்காமல் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக இம்ரான் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின், ராஜினாமா செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், நள்ளிரவு வரை பரபரப்பு நிலவியது.

* மறுசீராய்வு மனு
இம்ரான் அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்தது செல்லாது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து இம்ரான் அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

* அதிகாரம் போயிடுச்சு... பைத்தியம் பிடிச்சுடுச்சு...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று முன்தினம் இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, ‘எந்தவொரு வல்லரசும் இந்தியாவை அதன் நலன்களுக்கு எதிராக எதையும் செய்ய வற்புறுத்த முடியாது. பொருளாதாரத் தடைகளை மீறி ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குகிறது. இந்தியாவுக்கு யாரும் ஆணையிட முடியாது. இங்குள்ள ஐரோப்பிய யூனியன் தூதர்கள் என்ன சொன்னார்கள், அதை அவர்களால் இந்தியாவுக்கும் சொல்ல முடியுமா? இந்தியா இறையாண்மை கொண்ட நாடாக இருப்பதால், அவர்களால் அப்படி சொல்ல முடியவில்லை’ என்றார். இதற்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் துணை தலைவரும் மரியம் நவாஸ் பதிலடி தந்துள்ளார். அவர் கூறுகையில், ‘ஆட்சி அதிகாரம் போய்விட்டதைப் பார்த்து இம்ரானுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. உங்களுக்கு இந்தியாவை மிகவும் பிடிக்கும் என்றால், நீங்கள் ஏன் பாகிஸ்தானில் வாழ்கிறீர்கள். அதிகாரம் கைவிட்டு போகும் நிலையில் இப்படி ஒருவர் அழுவதை நான் பார்த்தது இல்லை’ என்று கூறினார்.  

* விசாரணை குழுவுக்கு
தலைமை ஏற்க மறுப்பு
தனது அரசை கவிழ்க்க அமெரிக்கா சதி செய்வதாக இம்ரான் கான் குற்றம்சாட்டி இருந்தார். இதை பாகிஸ்தான் ராணுவ மறுத்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி உண்மையை கண்டு அறிய லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) தாரிக் கான் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த குழுவின் தலைமை ஏற்க மாஜி ராணுவ அதிகாரி மறுத்துவிட்டார். இதற்கு எந்த காரணத்தையும் அவர் கூறவில்லை.

* வாக்கெடுப்புக்கு முன்பே ‘மாஜி’யாக மாறிய அமைச்சர்கள்
பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்புக்கு நடத்துவதற்கு முன்பாக, அமைச்சர் சவுத்ரி பவாத் ஹுசைன் தனது டிவிட்டரில் முன்னாள் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் என மாற்றி உள்ளார். இதேபோல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியும் மாஜி அமைச்சர் என மாற்றி கொண்டார். இதன் மூலம் ஆட்சி கவிழ்வது உறுதியானது.

* 19 பிரதமர்களும் 5 ஆண்டுகள் ஆட்சி செய்யவில்லை
பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை 19 பிரதமர்கள் ஆட்சி புரிந்து உள்ளனர். இதில் யாருமே முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சி செய்யவில்லை. ஊழல் குற்றச்சாட்டு, புதிய சட்டம் அமல்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தகுதி நீக்கம், ராஜினாமா, படுகொலை என ஆட்சியை இழந்துள்ளனர். முதல் பிரதமர் லியாகத் அலி கான் ஆக.14,1947ம் ஆண்டு பதவி ஏற்றார். 4 ஆண்டுகள் ஆட்சி புரிந்த அவர் படுகொலை செய்யப்பட்டார். நவாஸ் ஷெரீப் ஜூன் 5, 2013ம் ஆண்டு பதவியேற்று 4 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்த நிலையில் நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இம்ரான் கான் ஆக.18 2018ம் ஆண்டு பதவியேற்றார்.   

* கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனை
பாகிஸ்தானில் ஆட்சியே ஆட்டம் கண்ட நிலையில், ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, அந்நாட்டு ராணுவத்தின் ஊடக பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில், ‘ஷாகீன்-3 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை 2750 கி.மீ. தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும். அதாவது இந்தியாவின் வடகிழக்கு மற்றும் அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளை சென்று அடையும் திறன் கொண்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Bach ,Imran , Bach without meeting the resolution of no confidence. Will Prime Minister Imran resign? Stirring in Parliament from morning till night
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு