×

சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று தங்க சப்பரத்தில் சுவாமி-அம்மன் வீதியுலா

மதுரை: சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று சுவாமி, அம்மன் இன்று காலை தங்க சப்பரத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வந்தனர். பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்.5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வரும் வருகின்றனர். திருவிழாவின் 4ம் நாளான நேற்று காலை 9 மணிக்கு மீனாட்சி-பிரியாவிடையுடன், சுந்தரேஸ்வரர் தங்கப்பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டு தெற்குவாசல், சின்னக்கடை வீதி வழியாக வில்லாபுரத்தில் உள்ள பாவக்காய் மண்டபத்திற்கு சென்றனர்.

அங்கு எழுந்தருளியதும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மன், சுவாமியை வழிப்பட்டனர். சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் மாலை 6 மணிக்கு மேல் வில்லாபுரத்தில் இருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டு, சித்திரை வீதிகளில் பவனி வந்த அம்மனும், சுவாமியும் கோயிலை வந்தடைந்தனர். விழாவின் 5ம் நாளான இன்று காலை 9 மணியளவில் சுவாமி, பிரியாவிடை மற்றும் அம்மன் ஆகியோர் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளினர். இவர்கள் நான்கு மாசி வீதிகளையும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது வடக்கு மாசி வீதி மற்றும் ராமாயண சாவடி உள்ளிட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளினர்.

இன்று இரவு 7 மணிக்கு சுவாமி, பிரியாவிடையுடன் தங்க குதிரை வாகனத்திலும், மற்றொரு வாகனத்தில் அம்மனும் வடக்கு மாசி வீதி, கீழ மாசி வீதி, அம்மன் சன்னதி வழியாக வலம் வந்து கோயிலை அடைகின்றனர். மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் இரவு 7.30 மணிக்கு வேடர் பறி லீலை திருவிளையாடல் நடைபெறுகிறது. ஆறாம் நாளான நாளை காலை 7.30 மணியளவில் தங்க சப்பரத்தில் நான்கு மாசிவீதிகளில் எழுந்தருளுகின்றனர்.

இரவு 7.30 மணியளவில் தங்க ரிஷபம் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு மாசிவீதிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். முன்னதாக மாலை 6 மணியளவில் யானை மகால் முன்பு திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை நிலை நாட்டிய வரலாறு தல ஓதுவாரால் சொல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

Tags : Swami-Amman Vetiula ,Sapphar , Today is the fifth day of the Chithrai Festival at Swami-Amman Veediula in Thanga Sappara
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி