×

திட்டை, ஆலங்குடி கோயில்களில் 14ம் தேதி குருபெயர்ச்சி விழா: ஏற்பாடுகள் தீவிரம்

தஞ்சை: தஞ்சை அருகே திட்டை என்று அழைக்கப்படும் தென்திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற இந்த கோவில் தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர், சுயம்புவாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயரும் கொண்டவர். குருபார்க்க கோடி நன்மை என்பர். மற்ற அனைத்து கோயில்களிலும் சிவபெருமானின் ஞானவடிவான தட்சிணாமூர்த்தியையே குருவாக பாவித்து வழிபடப்படுகிறது.

ஆனால் திட்டை கோயிலில் வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னதிகளுக்கு நடுவில் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு குருபகவான் அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆவார். அதன்படி இந்த ஆண்டு வரும் 14ம் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4.16 மணிக்கு குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

இதையொட்டி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் முன்பு நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க, பந்தல்காலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மாவிலை, மலர்கள் கட்டப்பட்டன. பின்னர் குழிக்குள் நவதானியங்கள் போடப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது. குருப்பெயர்ச்சியையொட்டி வரும் 24ம் தேதி லட்சார்ச்சனையும், 29, 30 ஆகிய தேதிகளில் சிறப்பு பரிகார ஹோமமும் நடக்கிறது. அதேபோல் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலிலும் 14ம் தேதி குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Tags : 14th Ordination Ceremony ,Alangudi Temples , 14th Ordination Ceremony at Alangudi Temples: Arrangements are in full swing
× RELATED திட்டை, ஆலங்குடி கோயில்களில் 14ம் தேதி...