மேலூர் நகரில் ரூ. 1.68 கோடியில் நீர்நிலைகளை மேம்படுத்தும் பணிகள் துவக்கம்

மேலூர்: மேலூர் நகரில் ரூ. 1.68 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகளை மேம்படுத்தி, நடைபாதை மற்றும் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான பணிகள் நேற்று துவங்கியது. மேலூர் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 7வது வார்டான மண்கட்டி தெப்பக்குளத்தை மேம்படுத்த ரூ. 81.31 லட்சம், வார்டு 21ல் மலம்பட்டி ஊரணியை மேம்படுத்த ரூ. 87.47 லட்சம் என மொத்தம் ரூ. 1.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 10 ஊரணிகளில் முதற்கட்டமாக 2 தேர்வு செய்யப்பட்டு, அங்கு தூர்வாருதல், கரையை மேம்படுத்துதல், பேவர்பிளாக் நடை பாதை அமைத்தல், கழிப்பறை வசதி, நடை பயிற்சியாளர்கள் அமரும் இருக்கைகள், மின் விளக்கு வசதி, ஊரணியை சுற்றி பாதுகாப்பு வலை அமைத்தல், மரக்கன்றுகள் நடும் பணி, பாதுகாவலர் அறை அமைத்தல், சிசிடிவி கேமரா பொருத்துல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்கான பூமி பூஜை நேற்று மேலூர் நகர் திமுக செயலாளரும், நகராட்சி தலைவருமான முகமது யாசின் தலைமையில் நடைபெற்றது. உடன் துணை தலைவர் இளஞ்செழியன், நகராட்சி கமிஷனர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன், நகர்மன்ற உறுப்பினர்கள் கமால் மைதீன், நதியா உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: