அந்தமான் அருகே மர்ம படகு சிக்கியது; ஈரான் நாட்டைச் சேர்ந்த 13 பேர் சிக்கினர்: போதைப் பொருள் கடத்தியது அம்பலம்

சென்னை: அந்தமான் அருகே போதைப் பொருளுடன் ஈரான் நாட்டைச் சேர்ந்த 13 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தமான் தீவு அருகே இந்திரா என்ற பகுதியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக சர்வதேச போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவர்கள் அந்த பகுதிக்குச் சென்று படகை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். பின்னர் படகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். படகில் 13 பேர் இருந்தனர். அவர்கள் அனைவருமே ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள். போதைப் பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனால் பிடிபட்ட 13 பேர் மற்றும் படகுடன், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சென்னைக்கு கொண்டு வந்தனர். சென்னை கடற்பகுதிக்கு வந்ததும், சென்னை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், கடலோர காவல் படை உதவியுடன் சென்னை காசிமேடு துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதிக்கு செல்ல யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, படகு முழுவதும் போதைப் பொருள் சோதனை நடத்தப்பட்டது. மேலும் பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால், காசிமேடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: