×

குன்னூர் - மேட்டுபாளையம் சாலையில் விரிவாக்க பணிகளால் அழிக்கப்பட்ட யானைகள் வழித்தடத்தை மீட்க கோரிக்கை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தை கோவை உள்ளிட்ட பிற சமவெளி பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய சாலையாக ஊட்டி - குன்னூர் - மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலையில் உள்ள கல்லார் மற்றும் கோத்தகிரி - மேட்டுபாளையம் சாலையில் உள்ள குஞ்சப்பனை பகுதிகள் யானைகள் இடம்பெயரும் முக்கிய வழித்தடமாக விளங்கி வருகிறது.
கோடை காலங்களில் உணவு, தண்ணீர் தேடி யானைகள் குன்னூர் - மேட்டுபாளையம் சாலை, கோத்தகிரி சாலைகளில் உலா வருவது வழக்கம். இந்நிலையில் குன்னூர் - மேட்டுபாளையம் சாலையில் கடந்த 2018ம் ஆண்டில் இருந்தே நெடுஞ்சாலைத்துறை மூலம் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக பக்கவாட்டு சுவர் அமைத்தல், மழைநீர் வடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. வனப்பகுதி வழியாக செல்ல கூடிய இச்சாலையில் விரிவாக்க பணிகள் மேற்கொள்வதற்கு வனத்துறை மூலம் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக யானைகள் இடம்பெயர்ந்து செல்ல கூடிய இடங்கள் எல்லாம் விரிவாக்கம் என்ற பெயரில் தடுப்புசுவர்களாக மாறியுள்ளன. விரிவாக்க பணிகளுக்காக அகற்றப்பட்ட மண்கள், வனச்சரிவுகளுக்குள் கொட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் யானைகள் பயன்படுத்தி வந்த பாதைகளும் அழிந்துள்ளன. இதனால் யானைகள் செல்ல வழியின்றி சாலையிலேேய உலா வருகின்றன.

கடந்த மாத துவக்கத்தில் உணவு, தண்ணீர் தேடி 2 குட்டிகள் உட்பட 9 யானைகளைக் கொண்ட கூட்டம் குன்னூர் அருகே ரன்னிமேடு மலை ரயில் நிலையம் பகுதிக்கு வந்தன. தேயிலைத் தோட்ட குடியிருப்புகள்,குன்னூர் நகர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உணவு தேடி வருகின்றன. கடந்த சில நாட்களாக சின்ன கரும்பாலம், கிளன்டேல், கரிமொரஹட்டி உள்ளிட்ட தேயிலை தோட்டங்களை ஒட்டிய பகுதிகளில் உலா வருகின்றன.

தற்போது யானைகள் முகாமிட்டுள்ள பகுதிகளுக்கெல்லாம் இதுவரை யானைகள் வந்ததே இல்லை. தற்போது இந்த யானைகள் அங்கு முகாமிட்டுள்ளதால் அப்பகுதிகளில் வசிக்க கூடிய பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். யாைனகள் செல்லாமல் அங்கேயே இருக்கும் பட்சத்தில் யானை - மனித மோதல் ஏற்பட கூடிய அபாயம் நீடிக்கிறது. இதனிடையே யானைகளை எப்படியாவது பர்லியார் வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் முயன்று வருகின்றனர். இருப்பினும் யானை கூட்டம் எங்கும் செல்லாமல் அங்கேயே முகாமிட்டுள்ளன.

இந்த நிலையில் சாலை விரிவாக்க பணிகள் காரணமாக யானைகள் இடம்பெயர முடியாமல் திணறி வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்து வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் வனத்துறை ஆய்வு செய்த போது இச்சாலையில் 3க்கும் மேற்பட்ட இடங்களில் யானைகள் இடம்பெயர்ந்து செல்ல கூடிய பகுதிகள் விரிவாக்க பணிகளால் அழிந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த அதிமுக., ஆட்சியின் போது குன்னூர் - மேட்டுபாளையம் சாலையிலும் விரிவாக்க பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வனப்பகுதி வழியாக செல்லும் இச்சாலையில் விரிவாக்க பணிகள் மேற்கொள்வதால் வனம் மற்றும் சுற்றுசூழல் எந்த அளவிற்கு பாதிப்பிற்குள்ளாகும் என்பது போன்ற சுற்றுசூழல் சார்ந்த விவரங்கள் கருத்தில் கொள்ளப்படாமலும், குறிப்பாக வனத்துறையிடம் எவ்வித கருத்தும் கேட்கப்படாமல் குன்னூர் - மேட்டுபாளையம் இடையே பக்கவாட்டு சுவர்கள் ஜேசிபி., இயந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டும், தடுப்புசுவர்கள் கட்டப்பட்டும் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

அதிமுக., ஆட்சியின் போது அப்போதைய முதல்வரின் நேரடி கட்டுபாட்டில் நெடுஞ்சாலைத்துறை இருந்த நிலையில், ஆட்சேபனை தெரிவிப்பதில் கடும் நெருக்கடிகள் இருந்ததால், வனத்துைறயால் ஒன்றும் செய்ய  முடியாமல் போனதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயர்நீதிமன்றம் இவ்விவகாரத்தை விசாரித்து வரும் நிலையில், குன்னூர் - மேட்டுபாளையம் சாலையில் யானைகள் இடம்பெயர்ந்து செல்ல கூடிய இடங்களை மீட்க வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Gunnur - Mathupalam Road , Coonoor - Mettupalayam, road widening work, elephants way,
× RELATED குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் ராட்சத பாறைகளை அகற்ற கோரிக்கை