சத்தி புலிகள் காப்பக சாலையில் நீதிமன்ற உத்தரவுப்படி கனரக வாகனங்கள் தடுத்து நிறுத்தம்: டாரஸ் லாரி டிரைவர்கள் வாக்குவாதம்

சத்தியமங்கலம்:  உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பக  வனச்சாலையில் 12 சக்கர லாரிகள் மற்றும் 16.2 டன்னுக்கு மேல் பாரம் ஏற்றி வந்த சரக்கு லாரிகளை பண்ணாரி சோதனைச்சாவடியில் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.  திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக உள்ள சாலை மற்றும் திம்பம் மலைப்பாதை வழியாக அதிவேகமாக செல்லும் வாகனங்களால் வனவிலங்குகள் அடிபட்டு உயிரிழப்பதாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம்  திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்து தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தாளவாடி மலைப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இரவு நேர வாகன போக்குவரத்துக்கான தடையை நீக்கக்கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள், 12 சக்கரங்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள கனரக வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும், 16.2 டன்னுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு லாரிகளையும்  அனுமதிக்கக்கூடாது எனவும், வனப்பகுதி சாலையில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மலைகிராம மற்றும் பழங்குடியின மக்களுக்கு பாஸ்  வழங்கி நேரக்கட்டுப்பாடின்றி அனுமதிக்கலாம் எனவும் உத்தரவிட்டனர்.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் விதமாக நேற்று பண்ணாரி சோதனைச்சாவடியில் வனத்துறையினர் அவ்வழியாக வந்த 12 சக்கரங்கள் கொண்ட லாரிகளையும், 16.2 டன் லோடுடன் வந்த லாரிகளையும் தடுத்து நிறுத்தினர். கனரக வாகனங்களில் எடை மேடை ரசீது மற்றும் ஆவணங்களை  ஆய்வு செய்து எடை மேடை ரசீது இல்லாத வாகனங்கள் மற்றும் 16.2 டன்னுக்கு மேல் பாரம் ஏற்றி வந்த லாரிகளை திருப்பி அனுப்பினர். அத்தியாவசிய பொருளான பால் டேங்கர் லாரிகள் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், கர்நாடக மாநிலம் நோக்கி சென்ற பால் டேங்கர் லாரிக்கு 12 சக்கரங்கள் உள்ளதாக கூறி வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்காக வனத்துறையினர் திடீரென சரக்கு லாரிகளை தடுத்து நிறுத்தியதால் பண்ணாரி சோதனைநடசாவடியில் டாரஸ் லாரி டிரைவர்கள் லாரிகளை நிறுத்திவிட்டு காத்துக்கிடந்தனர். மேலும், ஒரு சில வாகன டிரைவர்கள் வனத்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அரசு பஸ்களுக்கு நேற்று மட்டும் அனுமதி

புலிகள் காப்பக பகுதியில் தமிழக அரசு மற்றும் கர்நாடக அரசு பேருந்துகள் பயணிக்க நேற்று ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவு குறித்து உரியமுறையில் பலருக்கும் தெரியாததால் அரசு பேருந்துகள் மட்டும் நேற்று இவ்வழித்தடத்தில் அனுமதிக்கப்பட்டன.இன்று முதல் அரசு பேருந்துகளும் இயக்கப்படமாட்டாது என சோதனைச்சாவடியில் உள்ள காவலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: