×

மாணவ, மாணவிகள் அதிர்ச்சி நெல்லை பல்கலை., விடுதி உணவில் ‘பல்லி’: பதிவாளரிடம் நேரில் சென்று புகார்

நெல்லை: நெல்லை பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிக்கான காலை உணவில் நேற்று பல்லி கிடந்தது மாணவ, மாணவிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஒன்று திரண்டு பல்கலைக்கழக பதிவாளரிடம் முறையிட்டனர். நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முழு நேரம், பகுதி நேரம், தொலை தூரக்கல்வி என 4100 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் 150 மாணவர்களும், மாணவிகள் விடுதியில் 500 மாணவிகளும் தங்கியிருந்து படிக்கின்றனர். விடுதியில் வெளி மாவட்ட மாணவ, மாணவிகள் மட்டுமின்றி, கேரளாவை சார்ந்தவர்கள் அதிகம் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

மாணவர் விடுதிக்கு 3 வேளை உணவும், மாணவிகள் விடுதியிலிருந்து சமைக்கப்பட்டு கொண்டு வந்து தரப்படும். இந்நிலையில் நேற்று காலை மாணவர்கள் விடுதியில் காலை டிபனாக பூரி கிழங்கு வழங்கப்பட்டது. காலை 8.30 மணிக்கு சாப்பிடச் சென்ற மாணவர்கள், தங்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் பல்லி கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தட்டில் இருந்த பூரி கிழங்கில் தென்பட்ட பல்லியோடு விடுதிக் காப்பாளரிடம் சென்று முறையிட்டனர். பின்னர் மாணவ, மாணவிகள் திரண்டு பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் தெரிவித்தனர். பதிவாளர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், ‘‘நெல்லை பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு விடுதியில் வழங்கப்படும் உணவுகள் தரமானதாக இருப்பதில்லை. சில தினங்களுக்கு முன்பு சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடந்தது. இப்போது பூரி கிழங்கில் பல்லி கிடக்கிறது. எனவே இதுகுறித்து பல்கலைக்கழக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்’’ என்றனர்.

Tags : Nellai University ,Lizard , Student, student,, in hostel meal, ‘lizard
× RELATED முகப்பேர் பகுதியில் பல்லி கிடந்த...