×

வலது காலுக்கு பதில் இடதுகாலில் ஆபரேஷன் ஜிஹெச் டாக்டர்களின் அலட்சியத்தால் நடக்க முடியாமல் தவிக்கும் மூதாட்டி

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணியை சேர்ந்தவர் மணிமுருககுமார். இவரது மனைவி குருவம்மாள் (67). இவருக்கு கடந்த சில மாதங்களாக வலது காலில் மூட்டு வலி இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்த அவர், கடந்த 22ம் தேதி உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்தார். அப்போது குருவம்மாளுக்கு எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. அதன் பிறகு அவருக்கு ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.

குருவம்மாள் உள்நோயாளியாக இருந்து அதற்கான சிகிச்சைகள் பெற்று வந்தார். கடந்த 4ம் தேதி அவருக்கு டாக்டர்கள் ஆபரேஷன் செய்தனர். மயக்க நிலையில் இருந்த குருவம்மாள், எழுந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் அவருக்கு வலது காலுக்கு பதிலாக இடது காலில் கட்டுகள் போடப்பட்டு ஆபரேஷன் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து அங்கிருந்தவர்களிடம் அவர் கேட்ட போது சரியான பதில் கூறவில்லை எனத் தெரிகிறது. வலது கால் மூட்டு வலிக்கு வந்த இடத்தில் இடது கால் மூட்டில் ஆபரேஷன் செய்யப்பட்டதால் குருவம்மாள் தற்போது 2 கால்களிலும் வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்படுவதாக தெரிகிறது.

இதுகுறித்து அவர் கூறுகையில், வலது கால் மூட்டு வலிக்காக அரசு மருத்துவமனைக்கு வந்தேன். ஆனால் இங்கு நல்லா இருந்த இடது காலில் ஆபரேஷன் செய்து விட்டனர். இதனால் தற்போது அந்த காலிலும் வலி ஏற்பட்டுள்ளது. டாக்டர்களின் அலட்சியத்தால் என்னால் நடக்க முடியவில்லை. எனவே டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்து அரசு எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Tags : GH , Right leg, left leg, operation, grandmother
× RELATED ஒட்டன்சத்திரம் ஜிஹெச்சில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்