×

இந்திதான் இந்தியா என்ற அமித்ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாட்டை தகர்த்துவிடும் : வைகோ கண்டனம்

சென்னை : இந்திதான் இந்தியா என்ற அமித்ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாட்டை தகர்த்துவிடும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: டெல்லியில் ஏப்ரல் -8 ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத்தின் 37 ஆவது அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில், “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். பல மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்து இருக்கிறார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழியால்தான் இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும் என்று கூறி இருக்கிற கருத்து கடும் கண்டனத்துக்கு உரியது. மேலும், “9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். இந்தித் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மத்திய அமைச்சரவையின் 70 விழுக்காடு நிகழ்ச்சி நிரல் இந்தியில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஆட்சி மொழியே அலுவல் மொழி என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இந்தி மொழியின் முக்கியத்துவத்தை நிச்சயமாக இது அதிகரிக்கச் செய்யும்” என்று அமித்ஷா கருத்துத் தெரிவித்துள்ளார்.இதன் மூலம் ஒன்றிய பா.ஜ.க. அரசு, இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தி மொழித் திணிப்பை தீவிரப்படுத்த முனைந்து இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. 2014 மே மாதம் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு பொறுப்பு ஏற்றத்திலிருந்து இந்தியைத் திணிப்பதற்கான அரசு ஆணைகளை அவ்வப்போது பிறப்பித்து வருகிறது.  

தற்போதும் அதைப்போல மீண்டும் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு கூட்டத்திலும் வலியுறுத்தி இருக்கிறார். இந்தி மொழியால் இந்தியாவை இணைக்க முடியாது. இந்திதான் இந்நாட்டின் பன்முகத்தன்மையை அழித்து, ஒற்றுமை உணர்வை சிதைத்துவிடும் என்பதை பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் உணரவில்லை.இந்தித் திணிப்புக்கு எதிராக 1938 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டு மக்கள் மொழி உரிமைக்காகப் போராடியதை மறந்துவிட வேண்டாம். 1965 இல் தமிழ் நாட்டில் நடைபெற்ற நான்காவது இந்தி எதிர்ப்புப் போராட்டம், நாட்டையே உலுக்கியதை ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு நினைவுபடுத்துகிறேன்.இந்தியாவின் பன்மொழி, பண்பாடு, மரபு உரிமைகள், தேசிய இனங்களின் தனித்துவமான அடையாளங்கள் சிதைக்கப்பட்டால், ஒருமைப்பாடு உடைந்து நொறுங்கி, இன்னொரு சோவியத் யூனியனாக இந்தியா மாறிவிடும். அதற்கு பா.ஜ.க. அரசு வழி வகுத்துவிடக் கூடாது என்று எச்சரிக்கிறேன்.

Tags : Amitshah ,India , Hindi, India, Indian Unity, Vaiko
× RELATED வாய்ப்பு கேட்ட விஜயதரணி காத்திருக்க சொன்ன அமித்ஷா