×

இலங்கையில் இருந்து 2 குழந்தையுடன் தம்பதி தனுஷ்கோடி வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து 2 குழந்தைகளுடன் தம்பதி நேற்று தனுஷ்கோடிக்கு வந்தனர். இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அன்றாட உணவுக்கு கூட வழியில்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். இதனால் வேறு வழியில்லாமல் தமிழகத்திற்கு அகதிகளாக சென்று விடலாம் என முடிவெடுத்து வர துவங்கியுள்ளனர். கடந்த மாதம் குழந்தைகள், பெண்கள் என 16 பேர் இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்திறங்கினர். அவர்கள் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை தலைமன்னார், முத்தரிப்புத்துறை பகுதியை சேர்ந்த அந்தோணி நிஷாந்த் (34), மனைவி ரஞ்சிதா (29) மற்றும் குழந்தைகள் ஜெனுஸ்ரீகா (10), ஆகாஷ் (3) ஆகியோர் மீன்பிடி படகு மூலம் நேற்று முன்தினம் நள்ளிரவு தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர். நேற்று காலை ஒன்றிய, மாநில புலனாய்வு துறையினர், இவர்களை மீட்டு விசாரித்து வருகின்றனர். அதன்பின் 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து ரஞ்சிதா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தலைமன்னாரில் மீன்பிடி கூலி வேலைக்கு சென்றோம். மண்ணெண்ணெய் கூட கிடைக்காததால் மீன்பிடி தொழில் முடங்கி விட்டது. சிமென்ட், மணல் தட்டுப்பாட்டால் சித்தாள் வேலையும் கிடைக்கவில்லை. அதனால் சாப்பாட்டுக்கே வழியில்லை. பள்ளிகளும் நடக்கவில்லை. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டே இருக்கிறது. குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, வேறு வழியில்லாமல் தமிழகம் வந்து விட்டோம். இன்னும் நிறைய குடும்பத்தினர் தமிழகம் வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்’’ என்றார்.

12 பேரை நடுக்கடலில் கைது செய்து விசாரணை?
இதற்கிடையே நேற்று நள்ளிரவு தலைமன்னார் பேசாளை கடற்கரையில் இருந்து, படகில் தனுஷ் கோடிக்கு அகதிகளாக வர முயன்ற 12 தமிழர்களை, இலங்கை போலீசார் நடுக்கடலில் தடுத்து நிறுத்தி, அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Dhanushkodi ,Sri Lanka , Sri Lanka, Couple, Dhanushkodi,
× RELATED இலங்கைக்கு கடலில் நீந்த முயன்ற கர்நாடக வீரர் சாவு