×

இந்தியை தேசிய மொழி என கூறி தனது தாய் மொழி குஜராத்திக்கு துரோகம் செய்கிறார் அமித்ஷா: சித்தராமையா கடும் தாக்குதல்

பெங்களூரு: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்திற்கு பதில் இணைப்பு மொழியாக இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு கர்நாடகா முன்னாள் முதல்வரும்,  இம்மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஒன்றியத்தில் பாஜ பதவிக்கு வந்த பிறகு இந்திதான் தேசிய மொழி என்பது போல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரே நாடு ஒரே மொழி என கூறிக்கொண்டு இந்திதான் தேசிய மொழி என பாஜ கூறுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தாய் மொழி குஜராத்தி. அப்படி இருக்கும் போது  இந்தி மொழிக்கு அடிபணிந்து அடிமை வேஷம் போடுவது ஏன்? குஜராத் மாநிலத்தில் பிறந்த காந்தியடிகள் பன்மொழி பல்வேறு கலாசாரத்தின் உருவமாக திகழ்ந்தார். அதே நேரம் குஜராத்தில் பிறந்த அமித்ஷா, சாவர்க்கரின் வழி தோன்றலாக மாறிவிட்டது ஏன்? தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்தியை நாட்டின் ஒருங்கிணைந்த மொழியாக ஏற்றுக் கொள்ளவில்லை.

அமித்ஷா கூறியிருப்பது, அவருடைய தாய் மொழிக்கு செய்த துரோகம். எனவே, இது போன்று பொறுப்பு இல்லாமல் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசக்கூடாது. மாநிலங்களின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என கூறிய அமித்ஷாவின் கருத்தை, கர்நாடக மாநிலத்தின் 6.5 கோடி கன்னடர்களின் ஒருவனாக கடுமையாக கண்டிக்கிறேன்.  இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags : Amitsha ,India , Hindi, National Language, Mother Tongue, Amitsha, Chidramaiah
× RELATED வாய்ப்பு கேட்ட விஜயதரணி காத்திருக்க சொன்ன அமித்ஷா