×

பாஜ., ஆர்எஸ்எஸ்.சுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: ராகுல் காந்தி அழைப்பு

புதுடெல்லி: பாஜ. ஆர்எஸ்எஸ்.க்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். அவை எவ்வாறு ஒன்றிணைய வேண்டும், அதன் செயல்பாடுகள் எப்படி கட்டமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது, என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். டெல்லியில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சரத் யாதவை,  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று சந்தித்து பேசினார். பின்னர், இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர்.  

அப்போது, ராகுல் காந்தி கூறியதாவது:
சரத் யாதவ் எனது குரு. அரசியல் குறித்து எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளார், வெறுப்புணர்வு பரப்பப்பட்டு நாடு பிளவுபட்டு, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நாம் அனைவரும் இந்த சவாலை எதிர்கொள்கிறோம். நாட்டை ஒன்றிணைக்க வேண்டும். நாட்டை மீண்டும் சகோதரத்துவ பாதையில் கொண்டு செல்ல வேண்டும். சமுதாயத்தின் நிலையில் இருந்து பொருளாதாரம் வேறுபட்டது என்று மக்கள் நினைக்கிறார்கள். நல்லிணக்கம் இல்லாத நாட்டில் வெறுப்புணர்வு அதிகரிக்கும், பணவீக்கம் உயரும். பொருளாதாரம் வளர்ச்சி அடையாது. வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படாது. நாட்டை பலப்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானது அமைதியும் நல்லிணக்கமும் தான்.

பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ்.க்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். அவை எவ்வாறு ஒன்றிணைவது, அதன் செயல்பாடுகள் எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வெறுப்பை விதைத்து மக்களை அச்சுறுத்தி, அவர்களை கொல்வதன் மூலமாக நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்று பாஜ.வினர் நினைக்கிறார்கள். என்ன நடக்கப் போகிறது என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. உங்கள் வாழ்க்கையில் இதுபோன்ற விஷயத்தை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.

வேலைவாய்ப்பு கட்டமைப்பு, இந்த நாட்டின் முதுகெலும்பு உடைந்து விட்டது. வட கொரியா நடந்து கொள்வதை போன்று நடந்து கொள்ளலாம் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். வெளிநாட்டை பார்த்து நாம் அப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறார். நாம் அது போன்ற வேலையை செய்ய முடியாது. அவர்கள் உடைத்த முதுகெலும்பின் மிகப்பெரிய விளைவுகள் இன்னும் மூன்று நான்கு ஆண்டுகளில் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவராக ராகுல் வர வேண்டும்
சரத் யாதவ் கூறுகையில், ‘‘காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை ஏன் நியமிக்கக் கூடாது? அவர் 24 மணி நேரமும் கட்சிக்காக உழைக்கிறார். அவர் கட்சியின் தலைவராக வேண்டும் என்று நினைக்கிறேன். காங்கிரஸ் ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும். அப்போதுதான் பெரிய விஷயங்கள் நடக்கும்,” என்றார்.



Tags : Paja ,RSS ,Suku ,Rahul Gandhi , BJP., RSS., Rahul Gandhi, Call
× RELATED காவி நிறத்தில் மாறிய தூர்தர்ஷன் லோகோ எதிர்க்கட்சியினர் கண்டனம்