×

சொந்த மகளைப் போல வளர்த்தவருக்கு நேர்ந்த அவலம் முதியவரின் கூகுள் பே-வில் இருந்து காதலனுக்கு ரூ.12 லட்சம் அனுப்பிய பெண்: உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட காதல்ஜோடி கைது

சென்னை: சென்னை அரும்பாக்கம் ஜானகிராமன் காலனி பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் (58). சாலிகிராமம் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றிய இவர் விருப்ப ஓய்வு பெற்றார். இவரது மனைவி ஷீலா (55). தம்பதியருக்கு  குழந்தைகள் இல்லை. அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி (45).  இவரது மகள் சுமித்ரா (19). அகஸ்டின் வீட்டில் வளர்மதி கடந்த 15 ஆண்டுகளாக, வேலை செய்து வருகிறார். சுமித்ரா அரசு கலைக்கல்லூரியில் 3ம் ஆண்டு படித்தவாறு, தனது தாய்க்கு ஒத்தாசையாக இருந்து வந்தார். வயதான தம்பதியர், தங்களுக்கு  குழந்தைகள்  இல்லாத காரணத்தால், சுமித்ராவை தங்கள் சொந்த மகள் போல வளர்த்து வந்தனர்.

இந்நிலையில், அரும்பாக்கம் பகுதியில் வாங்கி வைத்திருந்த மனையில் வீடு கட்ட அகஸ்டின் முடிவு செய்திருந்தார். அதற்காக, சாலிகிராமத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.20 லட்சம் வரை சிறுகசிறுக சேர்த்து வந்தார்.  பணத்தின் இருப்பை அறிய கடந்த மார்ச் 3ம் தேதி வங்கிக்கு சென்று பார்த்தபோது ரூ.8 லட்சம் மட்டுமே அவரது வங்கி கணக்கில் இருந்தது. உடனே அவர், அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து, போலீசார் வங்கி மேலாளர் அவரது சேமிப்பு கணக்கில் நடந்த பணப் பரிவர்த்தனையை ஆய்வு செய்தார். அப்போது, அகஸ்டின் மொபைலில் கூகுள் பே மூலமாக 2 வங்கி கணக்கிற்கு பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டது தெரிந்தது. அதன்பேரில், அண்ணாநகர் உதவி ஆணையர் ரவிசந்திரன் தலைமையில்,  சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு  செய்தபோது அதிர்ச்சி தகவல் வெளியானது.

அதில்,அகஸ்டின் மொபைலில் இருந்து கூகுள் பே செயலியை பதிவிறக்கம் செய்து அதிலிருந்து சுமித்ரா தனது காதலனான கே.கே.நகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமாரின் (31) இரண்டு வங்கி கணக்கிற்கு, ரூ.10,000 முதல் 50,000 ஆயிரம் வரை சிறுகசிறுக பணம் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, போலீசார் சுமித்ரா, சதீஷ்குமாரை தீவிரமாக தேடினர். எனவே, அவர்களது செல்போன் சிக்னலை போலீசார் கண்காணித்தனர். அப்போது, பல மாநிலங்களுக்கு சென்றது தெரியவந்தது. கடைசியாக, செல்போன் சிக்னல் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜை காட்டியது கடந்த 26ம் தேதி அங்கு சென்று சுமித்ரா, சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.  பின்னர், இருவரையும் 2 நாள் காவலில் எடுத்து, போலீசார் விசாரித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள 4 புதிய செல்போன்கள், ரூ.79 ஆயிரம் ரொக்கம், இரண்டரை பவுன் செயின் மற்றும் புதிய இருசக்கர வாகனம் என ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதில், 12 லட்சத்தில் காதலன் சதீஷ்குமாருக்கு 1 லட்சம் மதிப்புள்ள 4 புதிய செல்போன்கள், 3 சவரன் செயின், புதிதாக விலை உயர்ந்த பைக் வாங்கி கொடுத்ததும், இருவரும் தனியாக வசிக்க சென்னை போரூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து முன்பணமாக ரூ.50,000 கொடுத்ததும்,  வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கியது விசாரணயில் தெரிந்தது பின்னர் 2 நாள் விசாரணை முடிந்து,இருவரையும் சிறையில் அடைத்தனர். உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, சொந்த மகளைப்போல் வளர்த்த முதியவரின் வங்கி கணக்கில் இருந்து, காதலன்  வங்கி கணக்கிற்கு, இளம்பெண்  பணம் பரிவர்த்தனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Woman sends Rs 12 lakh to boyfriend from old man's Google Pay: Arrest of romantic couple
× RELATED தகாத உறவு விவகாரத்தில் இளம்பெண்...