முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழுவின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

புதுடெல்லி: ‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மேற்பார்வை குழுவுக்கே முழு அதிகாரம் உள்ளது. அது எடுக்கும் முடிவுக்கு தமிழக, கேரள அரசுகள் கட்டுப்பட வேண்டும்,’ என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இது விசாரணைக்கு வந்தபோது, ‘முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை வேண்டும் என்று எதன் அடிப்படையில் கேரள அரசு கேட்கிறது? அதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் இருக்கிறதா? அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டால் கீழ் பகுதி மக்கள் பாதிப்பார்கள் என்பதற்கான ஆதாரங்கள் என்ன? கடந்த 126 ஆண்டுகளாக அணை பாதுகாப்பாகதான் இருக்கிறது. 2006, 2014ம் ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அணையில் தமிழக அரசு செய்ய வேண்டிய பராமரிப்பு நிலுவை பணிகளை செய்ய வேண்டும்.

அதன் பிறகுதான், அணையின் பாதுகாப்பை சோதிக்க வேண்டும். ஆனால், அணையில் இருக்கும் மரங்களை வெட்டுவது உட்பட எந்த பணியையும் கேரளா அரசு செய்யவிடவில்லை. அதனால், அணை தொடர்பாக ஆதாரமற்ற செய்திகளை கூறும் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்,’ என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் உமாபதி, குமணன் வாதாடினர். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது பற்றி இப்போது யாரும் பேசக்கூடாது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை (நேற்று) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்,’ என தெரிவித்தனர்.

அதன்படி, நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர், அபாய் மற்றும் சி.டி.ரவிக்குமார் அடங்கிய அமர்வு, நேற்று பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, இயக்கம் மிகவும் முக்கியம். அணையின் கண்காணிப்பு மேற்பார்வை குழு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தேசிய அணைகள் பாதுகாப்பு சட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் வரையில், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மேற்பார்வை குழுவுக்கே முழு அதிகாரம் உள்ளது.

மேலும், தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து தலா ஒரு வல்லுனரும், ஒன்றிய நீர்வள ஆணையத்தின் சார்பில் ஒரு வல்லுனரும் இக்குழுவில் இடம் பெறுவார்கள். தற்போதைய நிலையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மேற்பார்வை குழுவே அனைத்தை விவகாரத்தையும் கவனிக்கும். அணையின் பராமரிப்பு, வலுப்படுத்தும் பணி உள்ளிட்டவை தொடர்பாக இந்த குழு பிறப்பிக்கும் உத்தரவை கடைபிடிக்காவிட்டால், சம்மந்தப்பட்ட மாநில தலைமை செயலாளரே அதற்கு பொறுப்பாவார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் குழு பிறப்பிக்கும் உத்தரவுகள், பரிந்துரைகளை இரு மாநிலங்களும் கடைபிடித்து, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கண்காணிப்பு மேற்பார்வை குழுவின் உத்தரவுகளை மதிக்காமல் இருந்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகும். மேலும், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய சட்டம்- 2021, முழுமையாக அமலுக்கு வந்தவுடன், முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழு தனது அதிகாரம் முழுவதையும் இந்த ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், வழக்கை வரும் மே 11ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அன்றைய தினம் இருக்கும் சூழலின் அடிப்படையில் மறு உத்தரவு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: