ஜெயலலிதாவுக்கு எதிராக அப்போதே குரல் எழுப்பினேன்...! என்னை பாஜக-வின் ஆள் என்று எப்படி முத்திரை குத்த முடியும்? மோடி, அமித் ஷாவை சந்தித்த பின் கொட்டித் தீர்த்த தமிழிசை

புதுடெல்லி: தெலங்கானா மாநில அரசு - ஆளுநர் இடையே மோதல் வலுக்கும் நிலையில் டெல்லி வந்த தமிழிசை சவுந்தரராஜன், பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். பின்னர் மாநில அரசுடனான மோதல் குறித்து பரபரப்பு பேட்டி அளித்தார். பாஜக ஆளும் மாநிலங்கள் அல்லாத எதிர்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுக்கும், அம்மாநில ஆளுநர்களுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லி, மேற்குவங்கம், தெலங்கானா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வெளிப்படையாக இந்த மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் நிர்வாக ரீதியாக ஆளுநர்களால் மாநில அரசுகளுக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன. அந்த வகையில் தெலங்கானா மாநில முதல்வரும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவுக்கும், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே இருந்த மோதல் இப்போது பகிரங்கமாக வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம் டெல்லி சென்ற தமிழிசை, பிரதமர் மோடியை சந்தித்தார்.

தொடர்ந்து நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதன்பின் தெலங்கானா பவனில் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ‘ஐதராபாத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அமித் ஷாவிடம் புகார் அளித்துள்ளேன். ஊழல் விவகாரம் தொடர்பான புகாரையும் அவரிடம் அளித்துள்ளேன். மாநில அரசுக்கு அடிமட்ட அளவில் மக்களிடையே கடும் எதிர்ப்பு உள்ளது. ஆனால் முன்கூட்டியே அங்கு தேர்தலுக்கு வாய்ப்பில்லை. ஆளுநர் அரசியல் செய்கிறார் என்று அமைச்சர்கள் சொல்வது சரியல்ல; அவர்கள் (முதல்வர் மற்றும் அமைச்சர்கள்) ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்பட்டும் வரவில்லை. என்னை எப்படி பாஜக ஆள் என்று அவர்கள் முத்திரை குத்த முடியும். இதுவரை பாஜக தலைவர்களுக்கு என்னை சந்திப்பதற்கு ஓரிரு முறைதான் அனுமதி வழங்கியுள்ளேன். மற்ற கட்சி தலைவர்கள் ஆளுநர் சந்திப்பதை மதிக்கிறோம் என்று அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டி கூறியது உண்மை என்றால், குடியரசு தின விழாவுக்கு அரசு அதிகாரிகள் வராதது ஏன்?.

ஆளுநருக்கு மாநில அரசு மரியாதை கொடுப்பதில்லை. அதற்காக வருந்தவில்லை. நான் டெல்லிக்கு வந்த மூன்று நாட்களில், தெலங்கானா பவனின் ரெசிடென்ட் கமிஷனரைக் காணவில்லை. முதல்வர் கே.சி.ஆரை (சந்திரசேகர ராவ்) போல் நான் செயல்பட்டிருந்தால் சட்டசபை ஏற்கனவே கலைக்கப்பட்டிருக்கும். விதிகளின்படி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சட்டசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். ஆளுநர் உரை இல்லாமல் கூட்டத்தை நடத்த முடியும். ஆனால் ஆளுநரின் கையெழுத்து இல்லாமல் கூட்டத்தை தொடங்கக்கூடாது. சட்டசபை கூட்டம் நடத்துவதற்கான கால இடைவெளி (ஆறுமாத காலம்) முடிய 15 நாட்கள் மட்டுமே இருந்தன. அந்த பதினைந்து நாட்களுக்கு, சட்டசபை கூட்டத்தொடரின் அனுமதி கோப்பினை நிறுத்தி வைத்திருந்தால், சட்டசபையே கலைக்கப்பட்டிருக்கும். ஆனால் நான் கண்ணியமாக நடந்து கொண்டேன். நான் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தில் பிறந்தவள். எனது தந்தை ஆறு முறை எம்எல்ஏவாகவும், ஒரு முறை எம்பியாகவும் இருந்தார். சட்டங்கள் மற்றும் அரசியல் பற்றிய புரிதல்கள் எனக்கும் உண்டு. தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த நான், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் எழுப்பினேன்.

ெதலங்கானா ராஜ்பவனில் நடந்த விழாவில் முதல்வரின் (சந்திரசேகர ராவ்) புகைப்படம் இல்லை என்று கூறுவது சரியல்ல. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படங்களை வைக்கச் சொன்னேன். அரசியலமைப்பு தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் முதல்வரின் புகைப்படம் வைக்கப்பட்டது. அன்று அவர் விழாவுக்கு அழைக்கப்பட்டார்; ஆனால் அவர் வரவில்லை. சில அமைச்சர்கள் வந்தது மகிழ்ச்சி அளித்தது. ஆளுநர் அலுவலகம் ஏன் புறக்கணிக்கப்படுகிறது? ஆளுநர் அலுவலகத்திற்கும், முதல்வர் அலுவலகத்திற்கும் இடையே உள்ள தூரம் ஏன் அதிகரித்தது என்று தெரியவில்லை. ெதலங்கானா அரசை அதன் அரசியலமைப்பு தகுதியில் இருந்து விமர்சிக்கவில்லை. மாறாக ஊடகங்களின் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கிறேன். எனது தாய் மரணம் அடைந்தார்.

 அதற்குகூட முதல்வர் சந்திரசேகர ராவ் வரவில்லை. எனது தாயின் உடலை தமிழகத்திற்கு கொண்டு செல்ல சிறப்பு விமானம் எதுவும் ஏற்பாடு செய்யவில்லை. அதனால் அவரது உடல் தனியே எடுத்து செல்லப்பட்டது. தாயின் மரணம் குறித்து ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் அலுவலகங்களுக்கு தெரிவித்தேன். ஜனாதிபதி உடனடியாக என்னை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறினார். வெளிநாட்டில் இருந்த பிரதமர் மோடி, மாலையில் தொலைபேசியில் பேசினார். ஆனால், முதல்வர் சந்திரசேகர ராவ் குறைந்தபட்சம் தொலைபேசியில் கூட எனக்கு ஆறுதல் கூறவில்லை.

மாநில அரசு ஒத்துழைத்தாலும், ஒத்துழைக்கவில்லை என்றாலும் மக்களுக்காக எனது கடமையைச் செய்வேன். இம்மாதம் 10 மற்றும் 11ம் தேதிகளில்  ரயில் மற்றும் சாலை மார்க்கமாக பத்ராசலம் செல்வேன். அங்கு நடக்கும் ராமர் பட்டாபிஷேகம்  மற்றும் திருமஞ்சன விழாவில் பங்கேற்பேன். மக்களின்  உணர்ச்சிகளைப் பணமாக்குவதில் சந்திரசேகர ராவ் வல்லவர். அவரின் பேச்சு மக்களை  மெய்சிலிர்க்க வைக்கும். ஆனால் அது நீண்ட காலம் நீடிக்காது. நான்  ஆரம்பத்திலிருந்தே சந்திரசேகர ராவை ‘அண்ணா’ என்றுதான் அழைப்பேன். அவர் ராஜ்பவனுக்கு வந்தால் கூட ‘அண்ணா’  என்றுதான் சொல்வேன். அவருடன் அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க தயாராக  இருக்கிறேன்’ என்று தமிழிசை பேட்டி அளித்தார்.

Related Stories: