உத்திரமேரூரில் ஸ்ரீதிரௌபதையம்மன் ஆலய அக்னி வசந்த விழா: துரியோதனன் படுகள நிகழ்ச்சி.! திரளான பக்தர்கள் பங்கேற்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் திரௌபதையம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழா கடந்த மாதம் 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மகாபாரத சொற்பொழிவு, தெருக்கூத்து நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், ஜலக்கிரிடை, வில் வளைப்பு, அல்லி அர்ச்சுணா, அர்ச்சுணன் தபசு, விராடபருவம், கிருஷ்ணன் தூது, அரவான் கள பலி, அபிமன்யூ சண்டை, கர்ண மோட்சம், 18ம் போர் போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்தது. இதைத் தொடர்ந்து துரியோதனன் வதம் செய்யும் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கான பிரம்மாண்டாமான துரியோதனன் போன்ற மண்ணிலான உருவம் அமைத்து, வண்ணம் தீட்டி பிரமாண்டமாக காட்சியளித்தது.

இதில் பீமன் வேடமிட்ட நாடக கலைஞர், துரியோதனனின் தொடையில் அடிக்க துரியோதனன் இறந்த காட்சியினை நாடக குழுவினர் தத்ரூபமாக நடித்து காட்டினர். இந்த நிகழ்ச்சியை காண உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் குவிந்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். மாலையில் விரதம் இருந்த பக்தர்கள் கோயிலில் பொங்கலிட்டும் தீக்குண்டம் இறங்கியும் நேத்திக்கடன் செலுத்தினர். இரவு ஸ்ரீதிரௌபதையம்மன், பஞ்சபாண்டவர்கள், கண்ணனுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பக்தர்கள் தீபாராதனை காட்டி சுவாமியை வழிபட்டனர். இரவில் தெருக்கூத்துடன் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: