×

போரினால் பாதிப்படைந்த உக்ரைனில் படித்த மாணவர்களுக்கு உதவி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை: உக்ரைன் மருத்துவ மாணவர்கள் குறித்து சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியதாவது. ஆயிரம் விளக்கு எழிலன்(திமுக): போருக்கு பின் உக்ரைன் என்ற நாடு இருக்குமா? என்றே தெரியாத நிலை உள்ளது .கல்வியும், மருத்துவமும் மாநிலப் பட்டியலில் இருந்திருந்தால், முதலமைச்சர் வேந்தராக இருந்திருந்தால், உக்ரைன் மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் இடம் தந்திருக்க முடியும்.
போளூர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி(அதிமுக): மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக போரை நிறுத்திய மத்திய அரசுக்கு நன்றி.ஆபரேஷன் கங்கா மூலம் அனைவரையும் பத்திரமாக இந்தியா மீட்டுவந்த மத்திய அரசுக்கு நன்றி. அனைவரின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரை முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும். மேட்டூர் ஜி.கே.மணி(பாமக): நீட் தேர்வால், தமிழ்நாட்டு மாணவர்கள் உக்ரைன் போன்ற நாடுகளுக்கு சென்று படித்து வருகின்றனர். மாணவர்களை மீட்க தமிழ்நாட்டு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையை பாராட்டுவதோடு, அவர்கள் படிப்பைத் தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரும்புதூர் செல்வப்பெருந்தகை(காங்கிரஸ்): உக்ரைனில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்களை பத்திரமாக அழைத்து வந்த பெருமை தமிழ்நாட்டு முதலமைச்சரையே சாரும். தமிழ்நாட்டின் பணியை உலகமே பாராட்டுகிறது. எள் என்றால், எண்ணெயாக இருப்பவர் அமைச்சர் மா.சுப்பிரமணியன். மாணவர்களை பத்திரமாக மீட்டதோடின்றி, அவர்களுக்கு உளவியல் ஆலோசனையையும் வழங்க ஏற்பாடு செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். மாணவர்களின் எதிர்காலம் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் சிந்தனை செல்வன்(விசிக):உக்ரைனில் நடைபெறும் யுத்தம் முடிவுக்கு வருமா என்ற கேள்வி நம்முன் நிற்கிறது. நீட் தேர்வினால் பாதிக்கப்படுகிற மாணவர்கள், தனியார் மருத்துவ கல்லூரிகளில் கடுமையான கல்வி கட்டண உயர்வால் பாதிக்கப்படுகிற மாணவர்கள் அயல்நாடுகளில் படிக்கின்ற சூழல் ஏற்படுகிறது.

2ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் பயின்று வருகின்றனர். உக்ரைன் மருத்துவ மாணவர்கள் மீட்கும் பிரச்சனையை வெறும் அலுவல் சார்ந்த விஷயமாக பார்க்காமல், வெறும் முதல்வராக பார்க்காமல், ஒரு தந்தையாக அணுகி அத்தனை மாணவர்களையும் மீட்டுக் கொண்டுவர  முயற்சிகளை மேற்கொண்டார் என்பதை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நன்றியோடு வாழ்த்தி வரவேற்கிறது.இந்த பிரச்னை தொடங்கிய முதல் நாளே முதல்வர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் மருத்துவ படிப்பை வேறு நாடுகளில் தொடர்வதற்கோ அல்லது ஒன்றிய அரசு சிறப்பு சட்டம் இயற்றி இந்தியாவிலேயே தொடங்குவதற்கோ தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

திருத்துறைப்பூண்டி மாரிமுத்து(இந்திய கம்யூனிஸ்ட்): மாநில அரசாங்கம் இந்த மாணவர்களின் கல்வியை உறுதி செய்யவேண்டும். அதற்கு இந்த சட்டமன்றம் ஒருமித்த கருத்துடன் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.
நாகை மாலி (சிபிஎம்):மருத்துவ கல்வியை தொடர்வதற்கு நல்ல நடவடிக்கையை முதலமைச்சர் எடுக்கவேண்டும். வாசுதேவன் நல்லூர் சதன் திருமலைகுமார்(மதிமுக):சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.  

இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: 1890 மாணவர்களை பாதுகாத்து முதல்வர் கொண்டு வந்துள்ளார். ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களுடைய கல்வி எந்த வகையிலும் பாதிக்கப்படகூடாது என எழுதப்பட்டிருந்தது. ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உக்ரைனில் போலவே போலந்து, கெஜகஸ்தான், அங்கேரி, ரொமானியா உள்ளிட்ட நாடுகளில்  சிலபஸ் இருப்பதால் அங்கு மாணவர்கள் சென்று படிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். ஆனால் இந்த கருத்துரு உருவாக காரணமாக இருந்தவர் முதல்வர். இந்த மாணவர்களுக்கு தமிழகம் அல்லது இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அல்லது அவர்கள் பாடத்திட்டமுள்ள பிற நாடுகளுக்கு செல்ல விரும்பினாலும் இந்த அரசு செய்யும்’ என்றார்.

Tags : Ukraine ,Minister ,Ma. Supreamanian , Assistance to students studying in war-torn Ukraine: Minister Ma Subramaniam
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...