×

திருவெறும்பூர் அருகே குப்பைகளுக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவெறும்பூர் : திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெல்பூர் பகுதியில் சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீவைத்து விடுவதால் புகைமூட்டம் உண்டாகி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெல்பூர் பகுதியில் உய்யக்கொண்டான் கரை சாலை உள்ளது.

இந்த சாலைவழியாக குமரேசபுரம், கூத்தைப்பார், எழில்நகர், பத்தாளப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சென்று வருகின்றனர். இந்நிலையில் வெல்போர் பகுதியில் சாலையின் இருபுறமும் மலைபோல் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த இடத்தை கடக்கும் போது கையில் மூக்கைப் பிடித்துக் கொண்டே முகத்தை மூடியவாறு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் மர்ம நபர்கள் இந்த குப்பைகளுக்கு அவ்வப்போது தீவைத்து விடுகின்றனர். இதனால் திருவெறும்பூரில் இருந்து பெல்பூர் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் பற்றி தெரியாமல் செல்வதுடன் புகையினால் கண் எரிச்சல் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகளால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள உயிர் மரங்களும் தீயில் எரிந்து போகிறது. இதுபோல் இந்த பகுதியில் உள்ள குப்பைகளை அடிக்கடி மர்ம நபர்கள் தீ வைப்பது வாடிக்கையாக உள்ளது.

அதனால் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெல்பூர் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்றுவதுடன் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டாமல் வேறு ஒரு இடத்தில் குப்பை கொட்டுவதற்கு அரசும் ஊராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ரம்யாவிடம் கேட்டபோது, கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பெல்பூர் பகுதியில் சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு மாற்று இடம் இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம். உரிய வழிவகைகளை செய்வதாக உறுதி அளித்து உள்ளனர் என்றார்.



Tags : Thiruverumbur , Thiruverumbur: Dumped on the roadside in Belpur area under Krishnasamudram panchayat near Thiruverumbur
× RELATED திருவெறும்பூர் அருகே சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்