யுனஸ்கோ பாதுகாப்பு அந்தஸ்து பெற்றது வால்பாறையில் நூதன முறையில் வெட்டப்படும் உயர்ந்த மரங்கள்-தடுத்து நிறுத்த இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை

வால்பாறை : மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறையில் தேசிய பூங்காவாக உள்ளது அக்காமலை புல்மலை. அதன்ஒருபகுதியாக, சின்னக்கல்லார் பள்ளத்தாக்கு சிறப்புமிக்கது.

தென்இந்தியாவின் சிரப்புஞ்சி என்று அழைக்கப்படும் சின்னக்கல்லார் மற்றும் சிங்கோனா பகுதி வரலாற்று சிறப்புமிக்க பகுதியாக கொண்டாடப்படுகிறது. வானுயர்ந்த மரங்கள், மிகவும் செழிப்பான வனப்பகுதிகள், 365 நாட்களும் வற்றாத சின்னக்கல்லாறு என வால்பாறையின் பாரம்பரிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.  இப்பகுதியில் அரசு தேயிலை தோட்ட கழகத்தால் தேயிலை பயிரிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், வனப்பகுதியை ஒட்டியும், சாலையோரம் உள்ள பகுதியில் உள்ள வானுயர்ந்த மரங்கள் கடந்த ஆட்சியில் பல நூறு மரங்கள் வெட்டப்பட்டது. இந்நிலையில், கடந்த சில வாரமாக மீண்டும் வெட்டப்படுகிறது. 1.5 மீட்டர் சுற்றுளவு கொண்ட மரங்களை  புதிய தொழில் நுட்பமாக கிளை மரம் வெட்டுதல் என கூறி 60 முதல் 100 அடி உயர மரங்கள் 20 அடி உயரம் விட்டு  மீதியை வெட்டி விடுகின்றனர்.

அப்படி வெட்டப்பட்ட மரங்கள் காய்ந்து பட்டுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் விறகும், பலகையும் எஸ்டேட் நிர்வாகத்தால் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனைமலை புலிகள் காப்பக நிர்வாகம் இதைக்கண்டு கொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது.தென்மேற்கு பருவ காற்றை மேற்கு தொடர்ச்சி மலைகள் தடுத்து மழை பொழிவை ஏற்படுத்தும் இந்த வானுயர்ந்த மரங்கள் வெட்டப்படுவது  இயற்கை ஆர்வலர்களை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

யுனஸ்கோவால் பாரம்பரிய மலையாக மேற்கு தொடர்ச்சி மலை அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வரும் மலையில் அமைந்துள்ள வால்பாறை பகுதியில் தொடர்ந்து நூதன முறையில், தேசிய பூங்காவான அக்காமலை புல்மலை அடிவாரத்தில், பாரம்பரியமாக உள்ள வனப்பு மிகுந்த இடத்தில் மரங்கள் வெட்டுவது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, தடுத்து நிறுத்தவேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.

Related Stories: