×

போடி அருகே பாதாளச் சாக்கடை பணியால் அடிக்கடி உடையும் குடிநீர் குழாய்கள்-பேரூராட்சி நிர்வாகம் கண்காணிக்க கோரிக்கை

போடி : போடி அருகே, மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் பாதாளச் சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டும்போது அடிக்கடி குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுகிறது. இதை சீரமைப்பதுடன் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படா வண்ணம் பேரூராட்சி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

போடி அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் ரெங்கநாதபுரம், கரட்டுப்பட்டி பகுதி, பாலாஜி நகர், கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிக்காக அடிக்கடி குழிகள் தோண்டுகின்றனர். இந்நிலையில், கரட்டுப்பட்டி பிரிவு உள்பட பல இடங்களில் பாதாளச் சாக்கடை பள்ளம் தோண்டும்போது குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. சாலையில் குடிநீர் ஆறாக ஓடுகிறது. இதனால், குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படுகிறது. பாதாளச் சாக்கடை திட்டப்பணிகளை மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

 மேலும், ஒரு பகுதியில் குழாய் உடைப்பு ஏற்படும்போது அதை சீரமைத்துவிட்டுத்தான் மற்ற இடங்களில் பணிகளை தொடர வேண்டும். எனவே, பேரூராட்சி நிர்வாகம் கண்காணித்து பாதாளச் சாக்கடை பணியின்போது குடிநீர் குழாய்கள் உடைவதை தடுக்க வேண்டும். இது குறித்து புதிதாக பொறுப்பேற்றிருக்கும் பேரூராட்சி தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Tags : Bodi , Bodi: Near Bodi, in the Mellachokkanathapuram municipality, drinking water pipes are often used when digging trenches for underground sewerage work.
× RELATED போடி அருகே ஓடைப் பாலம் அமைக்கும் பணி...