×

போச்சம்பள்ளி சுற்றுவட்டாரத்தில் புழுக்கள் தாக்கி அழுகி விழும் மாங்காய்கள்

போச்சம்பள்ளி :  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 45 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மா விளைச்சலில் போச்சம்பள்ளி தாலுகா முதலிடம் வகிக்கிறது. போச்சம்பள்ளி, வேலம்பட்டி, சந்தூர், தாதம்பட்டி, புலியூர், கொடமாண்டப்பட்டி, சாமல்பட்டி, ஒலப்பட்டி, வீரமலை உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக அளவில் மா சாகுபடி செய்யபட்டு வருகிறது. இங்கு 30 வகையான மா ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக மா விவசாயிகள் கடும் வறட்சி மற்றும் பூச்சி தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் பெருமளவில் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
அதேபோல் நடப்பாண்டும் மா மரங்களில் உள்ள மாங்காய்களை புழு தாக்கியுள்ளது. இதனால் மாங்காய்கள் அழுகி விழுந்து வருகிறது. இதையடுத்து கடந்த வாரம் தட்டக்கல் பகுதியில், கோயமுத்தூரில் இருந்து வந்திருந்த வேளாண் விஞ்ஞானிகள், பூச்சி மற்றும் நோய் தாக்கிய மா மரங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் தற்போது மரங்களில் புழு தாக்கி மாங்காய்கள் அழுகி கீழே விழுவது அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ராயக்கோட்டை: ராயக்கோட்டை பகுதியில் மல்கோவா, பீத்தா, அல்போன்சா, நீலம், பெங்களூரா வகை மாம்பழங்கள் அதிகம் விளைவிக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக மாங்கனி கண்காட்சி நடக்கவில்லை. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட மாம்பழங்கள் விற்பனை சரிந்து, வேறு வழியின்றி மா கூழ் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு விற்றனர். விவசாயிகளும், மா வியாபாாிகளும் நஷ்டமடைந்தனர்.

நடப்பாண்டு நல்ல மழை பெய்த போதிலும், மாமரங்களை பூச்சி தாக்கியுள்ளது. மருந்து அடித்தும் பலனில்லை. தவிர மாங்காய்களை புழு தாக்கி வருவதால், முழுமையாக விளையம் முன்பாக அவசர கதியில் விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். ஒரு கிலோ மாங்காய்களை ₹40க்கு விற்பனை செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.


Tags : Pochampally , Pochampally: Mango is cultivated in an area of about 45 thousand hectares in Krishnagiri district. Especially in mango yields
× RELATED கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது