×

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடுகள் தீவிரம் கிரிவலப்பாதையில் மெகா தூய்மைப்பணி

* வரும் 10ம் தேதி 1,400 பேர் பங்கேற்கின்றனர்
* 40 இடங்களில் அன்னதானம் வழங்க அனுமதி

திருவண்ணாமலை, ஏப்.8: திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, 14 கிமீ தூரமுள்ள கிரிவலப்பாதையை ஒட்டுமொத்தமாக தூய்மைச் செய்யும் பணி வரும் 10ம் தேதி நடக்கிறது. அதில், தன்னார்வலர்கள் உள்பட 1,400 பேர் ஈடுபட உள்ளனர்.பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான அண்ணாமலையார் திருக்கோயில் அமைந்துள்ள திருவண்ணாமலையில், மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீபமலையை கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். குறிப்பாக, தீபத்திருவிழா மற்றும் சித்ரா பவுர்ணமி நாட்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.

ஆனால், உலகை அச்சுறுத்திய ெகாரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்திருப்பதால் கடந்த மாதத்தில் இருந்து பவுர்ணமி கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படுகிறது.அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 15ம் தேதி நள்ளிரவு 2.25 மணி முதல் 16ம் தேதி நள்ளிரவு 1.10 மணிவரை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, வரும் 16ம் தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரவலம் செல்ல வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதையொட்டி, பவுர்ணமி கிரிவலத்துக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, கிரிவலப்பாதையை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நடந்தது அதில், எஸ்பி பவன்குமார், கூடுதல் கலெக்டர் மு.பிரதாப், அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், டிஎஸ்பிக்கள் அண்ணாதுரை, குணசேகரன், ஆர்டிஓ வெற்றிவேல், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் ப.கார்த்திவேல்மாறன், நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி உள்ளிட்ட பல்ேவறு துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு தன்னார்வ சேவை அமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அப்போது, கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்ததாவது:கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். எனவே, கிரிவலப்பாதையை தூய்மையாக பராமரிப்பது அவசியம். அதையொட்டி, நாைள மறுதினம்(10ம் தேதி) மெகா தூய்மைப்பணி நடைபெறும். கிரிவலப்பாைதயின ஒவ்வொரு கிலோ மீட்டர் தொலைவுக்கும் சுமார் 100 பேர் கொண்ட குழு அமைத்து இந்த பணியை மேற்கொள்ள உள்ளோம்.

அதில், நகராட்சி மற்றும் கிராம ஊராட்சி தூய்மைப்பணியாளர்கள் மட்டுமின்றி தன்னார்வர்களும், அரசு அலுவலர்கள் உள்பட 1,400 பேர் பங்கேற்கின்றனர். மேலும், கிரிவலம் முடிந்த பிறகும், இதுபோன்ற தூய்மைப்பணி நடைபெறும். சித்ரா பவுர்ணமி நாளன்று அன்னதானம வழங்க 40 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அந்த இடங்களில் மட்டும் முன் அனுமதி பெற்று அன்னதானம் வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, மக்கும் தன்மைக்கொண்ட இலை, பாக்குமட்டை தட்டு போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். அனுமதி அளிக்கப்படும் இடத்தை தவிர்த்து, வேறு இடங்களில் அன்னதானம் வழங்குவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Tags : Kriwalapadam , Thiruvannamalai, Apr. 8: Thiruvannamalai Chitra Pavurnami has cleared the entire 14-kilometer gorge trail ahead of the gorge.
× RELATED நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ்...