×

வேலூர் சத்துவாச்சாரியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்-ஆண்கள் போட்டி போராட்டத்தால் பரபரப்பு

வேலூர் :  வேலூர் சத்துவாச்சாரியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என்று ஆண்கள் போட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சி நகரில் பாலாற்றுக்கு செல்லும் வழியில் புதிய டாஸ்மாக் கடை கடந்த வாரம் திறக்கப்பட்டது. குறிஞ்சி நகர், முல்லை நகர், நேதாஜி நகர், மந்தைவெளி பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. டாஸ்மாக் கடையை ஒட்டியே ஏராளமான வீடுகள் உள்ளன. குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால், அப்பகுதி மக்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் எனக்கூறி பெண்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் கடையை மூடினர்.

இதற்கிடையில், அப்பகுதியில் நேற்று முன்தினம் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் கடைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. இது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை மூடக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அங்கு வந்த இளைஞர்கள் மற்றும் ஆண்கள் டாஸ்மாக் கடையை மூடக் கூடாது என போட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து போலீசார் டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களை பாலாற்று பகுதிக்கு விரட்டினர். அப்போது குடிமகன்கள் எங்களால் தான் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. நாங்கள் குடிக்கவில்லை என்றால் இலவச திட்டங்களை அமல்படுத்த முடியாது.

 எனவே டாஸ்மாக் கடையை மூடக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்கள் தொடர்ந்து, ‘வேண்டும் வேண்டும் டாஸ்மாக் கடை வேண்டும்’ என கோஷமிட்டனர். இதையடுத்து டாஸ்மாக் கடை தொடர்ந்து இயங்கியது. டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்களும், அதனைத் திறக்க கோரி ஆண்களும் போட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Tasmac ,Sattuvachari ,Vellore , Vellore: Women staged a protest against the opening of a Tasmac store in Vellore Sattuvachari. Then Tasmac
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்