திருவள்ளூர் பொன்னேரியில் கல்லூரி மாணவியிடம் தகாத முறையில் பேசிய பேராசிரியர்: உடனடி பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்

திருவள்ளூர்: மாணவி ஒருவரிடம் செல்போனில் தகாத முறையில் பேசிய பேராசிரியரை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி பொன்னேரி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு கல்லூரியில் பயிலும் மாணவியிடம் உதவிப்பேராசிரியர் மகேந்திரன் என்பவர், வீட்டுக்கு வா என செல்போனில் அழைத்த விவகாரத்தில், நேற்று பொன்னேரி போலீசார் மகேந்திரனை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று பொன்னேரி அரசு கல்லூரியில் பயிலும் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பொன்னேரி திருவெற்றியூர்  சாலையில் கல்லூரி எதிரே அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மாணவியிடம் தகாத முறையில் பேசிய உதவிப்பேராசிரியரை உடனடியாக பணிநீக்கம் செய்யவேண்டும் எனவும், கல்லூரி முதல்வரை மாற்றவேண்டும் என  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் இப்போராட்டத்தை நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்ட நிலையில், கல்லூரி வளாகத்திற்குள் வந்த மாணவர்கள், கல்லூரிவாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக திருவெற்றியூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.           

Related Stories: