×

வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீட்டையும் நிலைநிறுத்துவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் உறுதி

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித ஒதுக்கீடுக்கு நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பு போன்று, வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு விஷயத்திலும்  நிலைநிறுத்துவோம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறினார்.

வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நேற்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எடப்பாடி பழனிசாமி (எதிக்கட்சி தலைவர்), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகியோர் பேசினர். இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு வழங்கக்கூடிய தமிழ்நாடு சட்டம் 8/2001 தொடர்பாக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக வாதாடியது. உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி, அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, வில்சன் உள்ளிட்டோர் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சார்பிலே ஆணித்தரமாக வாதாடியிருக்கிறார்கள்.
இந்த சிறப்பு ஒதுக்கீட்டிற்கான பரிந்துரை 2012ல் வழங்கப்பட்டது. ஆனால், இதற்கான சட்டமுன்வடிவு எப்பொழுது வந்தது? 2021 சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மாலையில் வரப் போகிறது என்று காலையில் செய்தி வருகிறது. அன்று மாலையில், குறிப்பாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக, இந்த சட்டமுன்வடிவு அவையிலே கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.  2012 முதல் 2021 வரை உள்ள இடைவெளிக்கு பிறகு, காலையில் தேர்தல் அறிவிப்பு; மாலையில் இச்சட்டம் என்று கொண்டு வந்து, 26-2-2021 அன்று நிறைவேற்றிய, அந்த அவசரம்தான் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வெளிவந்த இந்த தீர்ப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.   

உச்சநீதிமன்றமே இதுகுறித்த தீர்ப்பில், “அரசாங்கம் தவறிழைத்துள்ளதை நாம் காண்கிறோம்” என்று மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளது. 26-2-2021ல் இருந்தது யாருடைய தலைமையிலான அரசு என்பதை சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. இந்த சிறப்பு இட ஒதுக்கீட்டை பொறுத்தவரைக்கும், சட்ட வல்லுநர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி, நிச்சயம் சமூக நீதி நிலைநாட்டப்படும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித ஒதுக்கீடு தொடர்பாக உயர் நீதிமன்றத்திலே வழங்கியிருக்கக்கூடிய தீர்ப்பை சுட்டிக்காட்டி, இந்த 7.5 சதவிகித ஒதுக்கீட்டை நாங்கள் கொண்டு வந்தபோது, அறிமுகப்படுத்தியபோது, என்னென்ன தரவுகளையெல்லாம் வைத்து நாங்கள் முறைப்படுத்தினோமோ, நிச்சயமாக அதேபோன்று நாங்கள் இந்த விஷயத்திலும் நிலைநிறுத்துவோம் என்று சொல்லிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Vanni ,Chief Minister ,MK Stalin , We will maintain 10.5 percent quota for Vanni: CM confirms in MK Stalin's assembly
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...