×

வடமாநில வாலிபர் லாரி மோதி பலி நஷ்டஈடு கேட்டு எண்ணெய் ஆலை சூறை கல்வீச்சில் 7 போலீசார் காயம்; 40 பேர் கைது: மொடக்குறிச்சி அருகே பரபரப்பு

மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே நஞ்சை ஊத்துக்குளியில் தனியார் ஆயில் மில் செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு டேங்கர் லாரி ஒன்று ஆலைக்குள் வந்தது. லாரி வளைவில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக பின்பக்க சக்கரத்தில் சிக்கி பீகார் மாநிலம், கிழக்கு செம்பரம் மாவட்டம் ராம்குருவாவை சேர்ந்த கமோத்ராம்  (30) என்ற தொழிலாளி உயிரிழந்தார்.இதனையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் அவரது சடலத்தை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆலை நிர்வாகத்தினர் முயன்றனர். அப்போது திரண்ட வட மாநில தொழிலாளர்கள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரினர்.

ஆனால் நிர்வாகத்தினர், முதலில் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என கூறியதாக தெரிகிறது. இழப்பீட்டு தொகையை கொடுத்தால் தான் சடலத்தை எடுக்க விடுவோம் என தொழிலாளர்கள் கூறிவிட்டனர். தகவலறிந்த மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் வந்து சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதை ஏற்காமல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமை மோசமானதால் ஈரோட்டில் இருந்து நூற்றுக்கணக்கான அதிவிரைவுப்படை வரவழைக்கப்பட்டு, சடலத்தை ஆம்புலன்சில் ஏற்றினர். பாதுகாப்பாக அதிவிரைவுப் படை வாகனம் சென்ற போது வடமாநில தொழிலாளர்கள் போலீஸ் வாகனத்தின் மீது சரமாரியாக கற்களை வீசினர்.

இதில், போலீஸ் வாகனத்தின் கண்ணாடி நொறுங்கியது. எனினும் சடலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் உருட்டுக்கட்டை மற்றும் கற்களைக் கொண்டு எண்ணெய் ஆலை மீது தாக்குதலில் ஈடுபட்டனர். தடுக்கச் சென்ற போலீசார் மீதுசக தாக்குதல் நடத்தினர். இதில் பெண் இன்ஸ்பெக்டர் தீபா, எஸ்ஐ பழனிச்சாமி மற்றும் போலீசார் பிரகாஷ், கார்த்தி உட்பட ஏழு பேர் காயமடைந்தனர். இதில், பிரகாஷ் படுகாயம் அடைந்தார். ஆலை முன்பாக ஏற்பட்ட வன்முறையில் செக்யூரிட்டி அறை அடித்து நொறுக்கப்பட்டது. போலீசாரின் 2 பைக்குகள், 3 ஜீப்கள் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து ஏடிஎஸ்பிக்கள் ஜானகிராமன், பாலாஜி, கூடுதல் எஸ்பி கௌதம்கோயல் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

நள்ளிரவு ஒரு மணி அளவில் போலீசார் குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் இரவோடு இரவாக தப்பி ஓடி விட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர். தகவல் அறிந்த கோவை டிஐஜி முத்துசாமி மொடக்குறிச்சி காவல்நிலையத்திற்கு நேரில் சென்று  விசாரணை நடத்தினார். பின்னர் கைதானவர்களை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். தப்பியோடிய 300க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த கமோத்ராம் சடலத்தை பிரேத பரிசோதனை செய்த பின்னர் பெருந்துறையில் உள்ள மின் மயானத்திற்கு இறுதிச் சடங்கு செய்ய கொண்டு சென்றனர். இதனால்  கிராமம் முழுவதும் பதற்றமும், பரபரப்புமாக காட்சி அளித்தது.

* நிவாரண தொகை அறிவிப்பு: விபத்தில் உயிரிழந்த கமோத்ராம் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் ரூ.5 லட்சம், பி.எப். பணம் ரூ.4 லட்சம், ஆலை நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதோடு, அவரது குடும்பத்திற்கு மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியத்தொகை வழங்கப்படும் என ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags : Modakkurichi , 7 policemen injured in oil mill looting scuffle; 40 arrested: Mutiny near Modakkurichi
× RELATED மொடக்குறிச்சி அருகே வேன் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து