×

மரியுபோலில் மட்டும் 5,000 பேர் படுகொலை டான்பாஸை சுற்றிவளைத்தது ரஷ்யா: எந்நேரமும் தாக்குதல் நடக்கும்; உயிருக்கு பயந்து ஓடும் மக்கள்

ஆண்ட்ரிவ்கா: கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸை கைப்பற்றுவதற்காக, அந்த பிராந்தியத்தை ரஷ்ய படைகள் சுற்றிவளைத்துள்ளன. எந்நேரமும் ஒரே நேரத்தில் பயங்கர தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுவதால், மக்கள் உயிருக்கு பயந்து ஊரை காலி செய்து வருகின்றனர். நேட்டோவில் இணையும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது கடந்த 6 வாரங்களுக்கு மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் படைகளின் கடும் பதிலடியால், பல நகரங்களில் இருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கி உள்ளன.

ஆனால், பின்வாங்குவதற்கும் முன்பாக அப்பகுதியில் பேரழிவை ஏற்படுத்தி இருப்பதுடன், அப்பாவி மக்களை கை, கால்கள் கட்டி சித்ரவதை செய்தும், துப்பாக்கியால் சுட்டும், பலாத்காரம் செய்தும் கொடூரமாக கொல்லப்பட்டு உள்ளனர். குறிப்பாக, புச்சா மற்றும் சுற்று வட்டார பகுதியில் ரஷ்ய படைகள் தங்கியிருந்த குடியிருப்பு அருகில் உள்ள பைன் காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, நேற்று முன்தினம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசுகையில், ‘ரஷ்ய ராணுவம் தாக்குதல்கள் ஐஎஸ் தீவிரவாதிகள் போல் உள்ளது. எனவே, விரைந்து செயல்படுங்கள். இல்லையென்றால் ஐ.நாவை கலைந்து விடுங்கள்’ என்று ஆவேசமாக பேசினார்.

மரியுபோலில் இதுவரை ரஷ்யா நடத்திய தாக்குதலில் நகரின் 90 சதவீத உள்கட்டமைப்புகள் அழிந்துவிட்டது. இது குறித்து மரியுபோல் மேயர் வாடிம் போயிச்சென்கோ கூறுகையில், ‘ரஷ்ய குண்டுவீச்சு, சண்டையில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில், 210 பேர் குழந்தைகள். மருத்துவமனைகள் மீது குண்டுவீசியதில் 50 பேர் தீயில் கருகி இறந்தனர்,’ என்றார். இந்த சூழலில் படைகளை பின்வாங்கி ரஷ்யா, கிழக்கு  உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற கவனம் செலுத்தி அப்பகுதியை சுற்றி படைகளை குவித்து வருகிறது. எந்நேரத்திலும் தாக்குதல்களை  ஆரம்பிக்க ரஷ்யா தயாராக உள்ளதால், உயிர் பிழைத்தால் போதும் என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

* இந்திய மாணவர்களுக்கு உக்ரைன் பல்கலை. சலுகை
உக்ரைனில் பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயின்ற வெளிநாட்டு மாணவர்கள் தங்களது தாய்நாட்டிலேயே மருத்து பயிற்சியை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ மாணவர்கள் தேவையான திறமையை வளர்த்து கொள்ள அவர்களுக்கு செய்முறை பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு வழங்கும்படி வெளிநாட்டு அரசுகளை உக்ரைன் மருத்துவ பல்கலைக் கழகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

* 4 எரிபொருள் சேமிப்பு கிடங்கு அழிப்பு
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உக்ரைனின் மைக்கோலேவ், கார்கிவ், சபோரிஜியா மற்றும் சுஹுய்வ் ஆகிய நகரங்களில் உள்ள நான்கு எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை ரஷ்யா ஏவுகணைகள் மூலம் ஒரே இரவில் அழித்துள்ளது. மைக்கோலேவ், கார்கிவ் நகரங்களுக்கு அருகிலும், தென்கிழக்கில் உள்ள டான்பாஸ் பகுதியிலும் தனது படைகளுக்கு எரிபொருள வழங்க உக்ரைன் இந்த வசதிகளைப் பயன்படுத்தி வந்தது’ என தெரிவித்துள்ளது.

* ரூபிள் மதிப்பு உயர்வு
ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தால், அந்நாட்டு ரூபிளின் மதிப்பு கடுமையாக சரிந்து ஒரு டாலருக்கு 121.5 ஆனது. 1998ம் ஆண்டு ரஷ்யாவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காலத்தை இந்த நிலை எட்டியது.  இதையடுத்து, ரூபிளி மதிப்பை உயர்த்த புடின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். உள்நாடு மற்றும் வெளிநாடுகள் என அனைவரும் ரூபிளில்தான் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதன் எதிரொலியாக ரூபிள் மதிப்பு உயர்ந்து ஒரு டாலருக்கு 79.7 ஆக உள்ளது.

* புடின் மகள்கள் மீது பொருளாதார தடை: அமெரிக்கா அதிரடி
ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினின் மகள்கள் காத்தரினா விலாடிமிரோவ்னா டிக்கனவோ, மரியா விலாடிமிரோவ்னா வொரன்ட்சோவா. காத்தரினா தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றுகிறார். ரஷ்ய அரசுக்கும், அதன் பாதுகாப்புத் துறைக்கும் ஆலோசகராக செயல்படுகிறார். இன்னொரு மகளான மரியா, அரசு நிதியுதவி செய்யும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவர் மரபியல் தொடர்பான ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். அதற்கு ரஷ்ய அரசு மிகப் பெரிய அளவில் நிதியுதவி செய்கிறது. இந்த இருவரும் புடினின் சொத்துக்களை நேரடியாக கையாளுவதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது. இவர்களுக்கு மட்டும்தான் புடினின் சொத்து விவரங்கள் தெரியும் என்றும் அமெரிக்கா நம்புகிறது. இதனால், அவர்களின் வங்கி பண பரிவர்த்தனையை முடக்கும் வகையில் அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது.


Tags : Mariupol ,Donbass ,Russia , Massacre of 5,000 in Mariupol alone surrounds Donbass Russia: Attack at any time; People who run for their lives
× RELATED ரஷ்யாவை புரட்டியெடுத்த கனமழை…அணை...