3வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி: அரசு மருத்துவமனையில் பரபரப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் 3வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலைக்கு முயன்றார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் காலையில், ஒரு வாலிபர் படுத்திருந்தார். அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பற்றி விசாரித்தபோது, கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் விஜயா. இவரது மகன் சந்துரு (எ) சந்திரபாபு (30) என தெரிந்தது. அவருக்கு, வலிப்பு நோய் ஏற்படுவதால், குடும்பத்தினர் விரக்தியடைந்தனர்.

இதனால் சந்துரு குடும்பத்தினரின் வேதனையை உணர்ந்து, வீட்டை விட்டு வெளியேறி, சாலையில் தங்கியிருந்தார் என தெரிந்தது. ஆனாலும், அவருக்கு வலிப்பு நோய் இருந்ததால், அவர் மன உளைச்சலுடன் காணப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை மருத்துவமனையின் 3வது மாடிக்கு சென்ற சந்துரு, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அங்குள்ள ஒரு ஸ்லாப்பில் விழுந்த அவர், அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு, மருத்துவமனை ஊழியர்கள் ஓடி வந்தனர். இதையடுத்து அவரை மீட்டு, மீண்டும் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். புகாரின்படி செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். அரசு மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து, வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: