×

தையூர் ஏரி நீரை பயன்படுத்தி ரூ.12.10 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்: சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை  மானிய கோரிக்கையின்போது அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்ட அறிவிப்பு:
* செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கோவளம் மற்றும் 10 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் தையூர்  ஏரியை நீராதாரமாக கொண்ட கூட்டு குடிநீர் திட்டம் ரூ.12.10 கோடியில் செயல்படுத்தப்படும்.
* தாம்பரம், காஞ்சிபுரம் மாநகராட்சிகளுக்கு புதிய அலுவலக கட்டிடம், கும்பகோணம் மாநகராட்சிக்கு கூடுதல் அலுவலக கட்டிடம் ரூ.17 கோடியில் அமைக்கப்படும். தரம் உயர்த்தப்பட்ட 28 நகராட்சிகளில் புதிய அலுவலக  கட்டிடம், கூடுதல் கட்டிடம் ரூ.75.50 கோடியிலும், 10 பேரூராட்சி அலுவலக கட்டிடம் ரூ.10 கோடியிலும் புதிதாக அமைக்கப்படும்.
* கோவை, காஞ்சிபுரம், திருச்சி, கடலூர் ஆகிய  மாநகராட்சிகளிலும், உதக மண்டலம், மானாமதுரை, ராமேஸ்வரம், ஆற்காடு, அரியலூர் ஆகிய நகராட்சிகளிலும் ரூ.41.20 கோடியில் 13 சந்தைகள் மேம்படுத்தப்படும்.
* 3 மாநகராட்சி மற்றும் 22 நகராட்சிகளில் நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் ரூ.62.50 கோடியில் அமைக்கப்படும்.
*  சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் பகுதியில் உள்ள ஆவடி, தாம்பரம் ஆகிய மாநகராட்சிகள் மற்றும் குன்றத்தூர், மாங்காடு, திருவேற்காடு ஆகிய நகராட்சி பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தவிர்க்க ரூ.82.15 கோடியில் 30  கிமீ நீளத்துக்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி எடுத்து  கொள்ளப்படும்.
* விவசாய விளைபொருட்களை நகர் பகுதிகளில் சந்தைப்படுத்த ஏதுவாக நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.200.70 கோடியில் பேரூராட்சிகளில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
* பேரூராட்சிகளில் 11,245 வீடற்ற ஏழைகளுக்கு, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தலா வீட்டுக்கு ரூ.2.10 லட்சம்  வீதம் ரூ.236.31 கோடி மானியமாக வழங்கப்படும்.
* கோவளம் வடிநிலப்பகுதியில் ரூ.1714 கோடியிலும், ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி நடக்கிறது. ஏனைய பகுதிகளில் ரூ.400.63 கோடியில் பல்வேறு நிதி ஆதாரங்களை ஒருங்கிணைத்து மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது கூடுதலாக மழைநீர் வடிகால்கள் அமைத்தல் மற்றும் தற்போதுள்ள மழைநீர் வடிகால்களை மேம்படுத்தும் பணிகள் வெள்ளத்தடுப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியில் இருந்து  மேற்கொள்ளப்படும்.
* அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், நீலகிரி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 13 மாவட்டங்களில் உள்ள 39 கூட்டு குடிநீர் திட்டங்களில் 1512 குடியிருப்புகளில் உள்ள 14.12 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.269.50 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Taiyur Lake Water ,Minister ,KN Nehru , 12.10 crore Joint Drinking Water Project Using Taiyur Lake Water: Minister KN Nehru's Announcement in the Assembly
× RELATED பெரம்பலூருக்கு மருத்துவ கல்லூரி வருவது உறுதி: அமைச்சர் கே.என்.நேரு தகவல்