×

குழந்தைகளுக்கு உணர்திறன் குறைபாடுகளை களைவதற்காக ஸ்டான்லியில் இலவச உணர்ச்சி ஒருங்கிணைப்பு பூங்கா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்

சென்னை: ஸ்டான்லி மருத்துவமனையில், குழந்தைகளுக்கு உணர்திறன் குறைபாடுகளை களைவதற்காக இலவச உணர்ச்சி ஒருங்கிணைப்பு பூங்கா அமைப்பதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்.
ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று உணர்ச்சி ஒருங்கிணைப்பு பூங்காவுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் அடிக்கல் நாட்டினர். நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி மற்றும் மாமன்ற உறுப்பினர் கீதா சுரேஷ் கலந்துகொண்டனர்.

உலக சுகாதார தினத்தின் கருப்பொருளாக “நமது பூமி, நமது சுகாதாரம்” என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நாளில் “தேசிய காலநிலை மாற்றம் மனித ஆரோக்கியம்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சுகாதார மாவட்டத்திலும் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தேர்ந்தெடுத்து 200 மரக்கன்றுகளை நடவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒளி உமிழ் விளக்குகளை பொருத்தவும், வெப்ப மீள்தன்மையுடைய கட்டிட கூரைகளுக்கு வண்ணப்பூச்சுகளை அடிக்கவும், மழைநீர் சேகரிக்கும் வண்ணம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கழிவுநீர் தேங்காமல் இருப்பதற்கு உறிஞ்சி குழிகள் அமைக்கவும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, மஞ்சப்பைகளை உபயோகிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அனைத்து சுகாதார பகுதி மாவட்ட துணை இயக்குனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ₹30 லட்சம் மதிப்பிலான உணர்ச்சி ஒருங்கிணைப்பு பூங்கா அடிக்கல் நாட்டு விழா மற்றும் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு, கவனக்குறைவு மிகை செயல்பாடு கோளாறு, பெருமூளைவாதம் மற்றும் உணர்ச்சி ஒருங்கிணைப்பு குறைபாடுகள் போன்ற அனைத்துவிதமான உணர்திறன் குறைபாடுகளை களைவதற்காக இந்த உணர்ச்சி ஒருங்கிணைப்பு பூங்கா உருவாக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு குழந்தையும் 6 மாதம் தொடர் சிகிச்சை மேற்கொள்ளும்பொழுது அதற்கான மொத்த சிகிச்சை கட்டணம் ₹1 லட்சத்திற்கும் மேல் ஆகும். இத்தகைய விலையுயர்ந்த சிகிச்சை இங்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. மேலும், ₹3.5 லட்சம் செலவில் மருத்துவ மாணவிகளுக்கான மகளிர் உடற்பயிற்சி கூடம் திறந்து வைக்கப்பட்டது.

கடைசியாக, கடந்த மூன்றாண்டுகளாக பயன்படுத்த இயலாத நிலையில் இருந்த ஸ்டான்லி மருத்துவமனைக்கும் குழந்தைகள் நலப்பிரிவுக்கும் இடையில் உள்ள நடை மேம்பாலம் ₹25 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டது. இதுதவிர உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Tags : Free Emotional Integration Park ,Stanley ,Minister ,Ma Subramaniam , Free Emotional Integration Park in Stanley to help children overcome sensory impairments: Minister Subramanian lays the foundation
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...