×

டேங்கர் லாரி மோதி தொழிலாளி பலி ஈரோடு எண்ணெய் ஆலையை சூறையாடிய தொழிலாளர்கள்: இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசார் காயம்; 40 பேர் கைது

ஈரோடு: ஈரோடு அருகே தனியார் எண்ணெய் ஆலையில் டேங்கர் லாரி மோதி தொழிலாளி பலியானார். இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு, போலீஸ் வாகனம் உள்பட 3 வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதில், இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசார் படுகாயம் அடைந்தனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளியில் தனியார் எண்ணெய் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்றிரவு பீகார் மாநிலத்தை சேர்ந்த சத்தியநாராயணா என்பவரது மகன் கமோத்ராம் (30) என்பவர் வேலை செய்து வந்தார். அப்போது பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக தனியார் டேங்கர் லாரி ஒன்று வந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கமோத்ராம் மீது எதிர்பாராத விதமாக லாரி மோதியதில் கீழே விழுந்தார். இதில் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்த கமோத்ராம் சம்பவ இடத்தில் பலியானார். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆலை நிர்வாகத்தினர் முயன்றனர். அப்போது அங்கு திரண்ட வடமாநில தொழிலாளர்கள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதுகுறித்து தகவலறிந்த மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இதை ஏற்கமறுத்த வடமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சுமார் 100க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கையில் உருட்டுக்கட்டை மற்றும் கற்களை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அடக்க முயன்றனர். அப்போது தொழிலாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது.

இதில், நிறுவனத்தின் காவலாளி அறை அடித்து நொறுக்கப்பட்டது. தொழிலாளர்கள் கல்வீசி தாக்கியதில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா, எஸ்.ஐ பழனிச்சாமி, போலீஸ்காரர்கள் பிரகாஷ், கார்த்தி உள்ளிட்ட 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தாக்குதலில் 3 போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து ஏடிஎஸ்பிக்கள் ஜானகிராமன், பாலாஜி, ஏஎஸ்பி கவுதம்கோயல் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் என 200க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது சடலத்தை எடுக்க விடாமல் வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் 40 பேரை கைது செய்து போலீசார் வாகனங்களில் ஏற்றி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags : Bali Erode oil plant , Tanker truck, collision, worker, killed
× RELATED கோவை மாவட்டம் முண்டாந்துறை...