நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கள்ளக்காதல் மோகத்தில், பெற்ற மகனை பாயாசத்தில் விஷம் வைத்து கொன்ற கொடூர தாயை போலீசார் கைது செய்தனர். மேலும், கள்ளக்காதலனையும் போலீசார் மடக்கிபிடித்தனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (34). கட்டிடத் தொழிலாளி. அவரது மனைவி கார்த்திகா (24). இந்த தம்பதியின் மகள் சஞ்சனா (4), மகன் சரண் (2). நேற்று பிற்பகலில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த சரண் திடீரென மயங்கி விழுந்தான்.
உடனே கணவருக்கு போன் செய்தார் கார்த்திகா. விஷப்பொடியை சாப்பிட்டு மகன் மயக்கமடைந்துவிட்டதாக கூறினார். இந்த தகவலை கேட்டு பதற்றமுடன் வீட்டுக்கு வந்தார் ஜெகதீஷ். தொடர்ந்து மகன் சரணை எடுத்து கொண்டு மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். குழந்தையின் உடல் நிலையை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சரண் இறந்துவிட்டதாக கூறினார். இந்நிலையில், சஞ்சனாவுக்கும் லேசான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவளை கேரளாவில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். அதன் பிறகு சரணின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குழந்தை விஷப்பொடியை சாப்பிட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து ஜெகதீஸ், கார்த்திகா ஆகிய 2 பேர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரித்தனர்.
கார்த்திகாவிடம் நடந்த விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், பெண் போலீசார் உதவியுடன் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், குழந்தையை கொன்று கார்த்திகா ஆடிய நாடகம் அம்பலமானது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மார்த்தாண்டம் அருகே மாறாயபுரத்தில் நடந்த ஒரு கோயில் திருவிழாவுக்காக கார்த்திகா உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது சுனில் (21) என்பவரை கார்த்திகா சந்தித்து உள்ளார். முதல் சந்திப்பிலேயே சுனிலிடம் மயங்கி, மனதை பறிகொடுத்துள்ளார் கார்த்திகா.
பின்னர், 2 பேரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறி கொண்டுள்ளனர். கோயில் திருவிழா முடிந்து ஊருக்கு வந்த பிறகு கள்ளக்காதலன் சுனிலிடம் செல்போனில் மெசேஜ் அனுப்பியும், வீடியோ காலிலும் கார்த்திகா பேசி வந்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்து உள்ளனர். கார்த்திகாவுக்கு திருமணமாகவில்லை என்று கருதியே சுனில் பழகி வந்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் கார்த்திகாவுக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது என்பதை சுனில் அறிந்து கொண்டுள்ளார். இது குறித்து கார்த்திகாவிடம் கேட்டு உள்ளார்.
திருமணமான தகவலை முதலில் மறைத்தவர், அதன் பிறகு ஒப்புக்கொண்டுள்ளார். ஒரு குழந்தை மட்டுமே உள்ளது என்று சமாளித்தவர், தன்னை கைவிட்டு விட வேண்டாம் என்றும் கூறி இருக்கிறார்.
சுனிலும் ஒரு குழந்தைதானே உள்ளது என்று நினைத்து வழக்கம் போல் கார்த்திகாவை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அதன் பிறகு கார்த்திகாவுக்கு 2 குழந்தை இருக்கின்ற தகவல் அறிந்ததும் சுனில் அவரை விட்டு விலகி உள்ளார். ஆனால் கார்த்திகாவால் சுனிலை மறக்க முடியவில்லை. தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ளும் போதெல்லாம் சுனில் முன்பு போல் பேசுவதில்லையாம். இதனால் விரக்தி அடைந்த கார்த்திகா, குழந்தைகள் 2 பேரையும் கொன்று விட்டால் கள்ளக்காதலனை கைபிடிக்க தடை இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
அதன்படி வீட்டில் பாயாசம் செய்து 2 குழந்தைகளுக்கும் கொடுத்து உள்ளார். இதை சாப்பிட்ட குழந்தை சரண் இறந்து விட்டான். விஷம் கலந்த பாயாசத்தை குடித்த சஞ்சனா கேரளாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாள்.
சரணின் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே என்ன விஷம் பாயாசத்தில் கலக்கப்பட்டு இருந்தது என்பது தெரியும். இவ்வாறு போலீசார் கூறினர்.
இதையடுத்து கார்த்திகாவை கைது செய்த போலீசார், கள்ளக்காதலன் சுனிலை தேடி இரவோடு இரவாக பிடிக்க அவர் வீட்டுக்கு சென்றனர். போலீசைப் பார்த்ததும் சுனில் தப்பியோட முயன்றார். அவரை மடக்கிப் பிடித்து கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்திகாவால் சுனிலை மறக்க முடியவில்லை. குழந்தைகள் 2 பேரையும் கொன்று விட்டால் கள்ளக்காதலனை கைபிடிக்க தடை இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
