சீசன் சமயத்தில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளுக்காக ‘ஹில் காப் நீலகிரி போலீஸ்’ 4 புல்லட் பைக் ரோந்து வாகனங்கள்: மேற்கு மண்டல ஐஜி துவக்கி வைத்தார்

ஊட்டி:  சீசன்  சமயத்தில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்  பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் ‘ஹில் காப் நீலகிரி போலீஸ்’ என்ற பெயரில் 4 புல்லட் பைக் ரோந்து வாகனங்களை மேற்கு மண்டல ஐஜி சுதாகர்  துவக்கி வைத்தார்.மலை மாவட்டமான நீலகிரியில் ஆண்டு முழுவதும் நிலவும்  இதமான காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது  வழக்கம். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கடைபிடிக்கப்படும் கோடை சீசனின்  போது சுற்றுலா பயணிகள் வருகை பல மடங்கு அதிகரிக்கும். இந்நிலையில், வரும் மே  மாதம் நீலகிரி மாவட்டத்தில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி  கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கோடை விழா  நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்த சமயத்தில் போக்குவரத்து நெரிசல்  ஏற்படும் போது ஜீப் போன்ற ரோந்து வாகனங்களில் சென்று சீரமைப்பது கடினமாக  இருக்கும். இதனால்,  நீலகிரி மாவட்ட போலீஸ்  சார்பில் புதிதாக ‘ஹில் காப்  நீலகிரி போலீஸ்’ என்ற 4 புல்லட் ரோந்து வாகனங்கள்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில், 3 பைக்குகள் ஆண் காவலர்களுக்கும், ஒரு  புல்லட் பெண் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட ஒதுக்கீடு செய்யப்பட்டு  உள்ளது. இவர்களுக்கு உடலில் பொருத்தி கொள்ளும் வகையிலான கேமரா, வாக்கி  டாக்கி மற்றும் ஒளிரும் எதிரொலிப்பு விளக்குகள் உள்ளிட்டவை  வழங்கப்பட்டுள்ளது. இந்த ரோந்து வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கும்  நிகழ்ச்சி ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் நேற்று நடந்தது. இதில் மேற்கு  மண்டல ஐஜி சுதாகர் பங்கேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து நீலகிரி  மாவட்ட காவல் அலுவலகத்தில்  போலீசார், அமைச்சு பணியாளர்கள் மற்றும்  பொதுமக்கள் பயனடையும் வகையில் ‘ஹில் காப் கபே’ என்ற மலிவு விலையில் தரமான  சுவையுடன் புதிதாக உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை திறக்கும்  நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஜி சுதாகர், உணவக பொறுப்பாளரை வைத்து திறந்து  வைத்தார்.

இதைத்தொடர்ந்து மேற்கு மண்டல ஐஜி சுதாகர் நிருபர்களிடம் கூறுகையில்,``கோடை சீசனின் போது அதிக சுற்றுலா பயணிகள் வந்து  செல்வார்கள். இதுபோன்ற சமயங்களில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால்,  சுலபமாக சென்று போக்குவரத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக ‘ஹில் காப்’  என்ற பெயரில் புல்லட் ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டி நகரில் கோடைவிழாவின் போது வரும் சுற்றுலாபயணிகளுக்கு  உதவிகரமாகவும் இருப்பார்கள்.  செயின் பறிப்பு, வழிப்பறி கொள்ளை  போன்ற குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் இவர்கள் உதவியாக இருப்பார்கள்.  இத்திட்டம் வெற்றி பெற்றால் குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட  பகுதிகளிலும் செயல்படுத்தப்படும்.

கோடை சீசன் போக்குவரத்து சீரமைப்பு  பணிகள், பாதுகாப்பு பணிகளுக்கான ஒரு கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல்  படையினர் நீலகிரி மாவட்டத்திற்கு வர உள்ளனர். சீசனின் போது எப்போது  போல் ஒருவழிப்பாதை உள்ளிட்ட அனைத்தும் கடைபிடிக்கப்படும். குற்றங்கள்,  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு, போக்குவரத்து சீரமைப்பு  ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கோடை சீசனின் போது  டிரோன் கேமரா பயன்படுத்தி கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். இதுதவிர முக்கிய  பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்’’ என்றார். இந்நிகழ்ச்சியில் கோவை சரக டிஐஜி முத்துசாமி, நீலகிரி மாவட்ட எஸ்பி  ஆஷிஷ் ராவத், கூடுதல் எஸ்பிக்கள் மோகன் நவாஸ், சந்திரசேகர்,  முத்துமாணிக்கம் மற்றும் டிஎஸ்பிக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: