கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுநகர் அரசினர் உயர்நிலை பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுநகர் ஊராட்சியில் அரசினர் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டி பாதுகாப்பான முறையில் அரசினர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தாலும், காற்று, மழையின் காரணத்தால் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து கீழே விழுந்து விட்டது. சில ஆண்டுகள் ஆகியும் மீண்டும் இதுவரை கட்டாததால் இப்பகுதியில் உள்ள ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் போது பள்ளி வளாகத்திற்குள் சென்று விடுவதாகவும் அந்நியரின் ஆதிக்கம் பள்ளி வளாகத்தில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

மேலும் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா பள்ளி வளாகத்தை சுற்றி பார்த்துவிட்டு சொந்த நிதியில் பள்ளி கட்டிடமும் சுற்றுச்சுவரும் கட்டித் தருவதாக உறுதி அளித்த நிலையில் இதுநாள்வரை கட்டித் தரவில்லை என இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். சில தினங்களுக்கு முன் பள்ளி நேரத்தில் மாணவர்கள் மீது பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் தப்பித்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பள்ளி வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்றும் பழுதான கட்டிடங்களை உடனடியாக சீர் செய்து தர வேண்டும் எனவும் என ஊர் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: