நாகர்கோவிலில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான டிஎஸ்பி வசித்த வாடகை வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது: விடிய விடிய விசாரணைக்குப்பின் சிறையில் அடைப்பு

நாகர்கோவில், ஏப்.7 : நாகர்கோவிலில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான டிஎஸ்பி வசித்த வாடகை வீட்டில் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தியபின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நாகர்கோவில் புன்னைநகரை சேர்ந்தவர் சிவகுரு குற்றாலம் (66). ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர், வெள்ளிச்சந்தை அருகே நிலம் வாங்குவதற்காக உரிமையாளர்களிடம் ₹1.50 கோடி கொடுத்து இருந்தார். அவர்கள் நிலத்தை ெகாடுக்கவில்லை, பணத்தையும் திரும்ப தரவில்லை. இது தொடர்பாக சிவகுரு குற்றாலம், மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. தங்கவேல் விசாரணை நடத்தி, பிரச்னையை தீர்க்க தனக்கு ₹10 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கிடையில் இரு தரப்பினரும் சமாதானமாகிவிட்டனர். இதை அவர், டி.எஸ்.பி. தங்கவேலுவிடம் தெரிவித்தபோது, தன்னால் பிரச்னை தீர்ந்தது, அதனால் பேசியபடி ₹10 லட்சத்தை தரும்படி கேட்க, அவ்வளவு பணம் இல்லை என சிவகுரு குற்றாமல் கூறவே முதலில் ₹5 லட்சம் தரும்படி டி.எஸ்.பி. கூறியுள்ளார்.  இதுபற்றி அவர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசாரின் ஆலோசனையின்படி நேற்று முன்தினம் மாலை நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில்  உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் டி.எஸ்.பி. தங்கவேலிடம் அவர் ₹5 லட்சத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் டிஎஸ்பியை மடக்கினர். பின்னர் அவரிடம் விடிய, விடிய விசாரணை நடந்தது. அதிகாலையில் ராமன்புதூரில் டி.எஸ்.பி. தங்கி இருந்த வாடகை வீட்டுக்கு அழைத்து சென்ற போலீசார், அங்கும் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வீட்டில் இருந்த பீரோவில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதிலும் ₹5 லட்சம் இருந்தது. இந்த பணம் தொடர்பாக கேட்ட போது டி.எஸ்.பி. தங்கவேல் எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும் வீட்டில் சில ஆவணங்களும் சிக்கியுள்ளன. அவற்றை கைப்பற்றிய போலீசார், நேற்று காலை டி.எஸ்.பி. தங்கவேலை கைது செய்தனர். பின்னர் அவரை நாகர்கோவில் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி டி.எஸ்.பி. தங்கவேல், நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக நேற்று காலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டி.எஸ்.பி. தங்கவேலுக்கு மருத்துவ பரிசோதனையும் நடைபெற்றது.

சொந்த ஊரிலும் சோதனை நடத்த முடிவு: டி.எஸ்.பி. தங்கவேல் கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும்,  ஒரு மகனும் உள்ளனர். மகன் கனடாவில் பிஇ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், கோபி செட்டிபாளையம் டி.எஸ்.பி.யாக இருந்து கடந்த ஜூலை மாதம் குமரி மாவட்டத்துக்கு மாறுதலாகி வந்தார். ராமன்புதூர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி உள்ளார். குமரி மாவட்டத்தில் சமீபத்தில் ஒரே வழக்கில் ₹5 லட்சம் வரை லஞ்சம் வாங்கி கைதானது டி.எஸ்.பி. தங்கவேல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை சூலூரில் உள்ள அவரது சொந்த வீட்டிலும், அவரது மனைவி தற்போது வசித்து வரும் சத்தியமங்கலம் திருநகர் காலனி வீட்டிலும் சோதனை நடத்த உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறினர். டி.எஸ்.பி. மற்றும் அவரை சார்ந்தவர்களின் வங்கி கணக்கு விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

உடன் இருந்த பெண் யார்?: நாகர்கோவில் ராமன்புதூரில் டி.எஸ்.பி. தங்கவேல் வசித்து வந்த வீட்டில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் இருந்தார். அவர் யார்? என்பது குறித்து விசாரித்த போது திருச்சியை சேர்ந்த தனது உறவு பெண் என டி.எஸ்.பி. கூறினார். அவரிடமும் சிறிது நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி விவரங்களை சேகரித்தனர். பின்னர் அந்த பெண் வீட்டில் உள்ள மற்றொரு  அறைக்கு சென்று தனியாக அமர்ந்திருந்தார்.

Related Stories: