×

சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கை காவலில் எடுத்த சிபிஐ

மும்பை: மகாராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக சிபிஐ நேற்று காவலில் எடுத்துள்ளது. தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை அமைச்சருமான அனில் தேஷ்முக்குக்கு எதிராக மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம்பீர் சிங் ஊழல் குற்றச்சாட்டை எழுப்பினார். மும்பையில் உள்ள மதுபார்கள், ஓட்டல்களில் இருந்து மாதம்தோறும் நூறு கோடி ரூபாய் வசூலித்து தரவேண்டும் என்று அனில் தேஷ்முக் தன்னை கட்டாயப்படுத்துவதாக பரம்பீர் சிங் குற்றம்சாட்டினார். இதன் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், மும்பை ஆர்த்தூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தேஷ்முக்கை சிபிஐ நேற்று விசாரணைக்காக காவலில் எடுத்தது. அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு சிபிஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

மோடியுடன் பவார் சந்திப்பு: தேசியவாத காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கை சிபிஐ நேற்று காவலில் எடுத்ததும், சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத், அவரது மனைவிக்கு சொந்தமான ரூ.11.5 கோடி மதிப்பு சொத்துகளை நேற்று முன்தினம் அமலாக்கத் துறை முடக்கியதும், மகாராஷ்டிராவின் ஆளும் சிவசேனா கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், தேசிய காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று திடீரென நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, தேஷ்முக், ராவத் விவகாரம் பற்றி மோடியுடன் பவார் பேசியதாக கருதப்படுகிறது.

Tags : CPI ,Anil Deshmal , CBI arrests jailed former minister Anil Deshmukh
× RELATED டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான...