×

அஞ்சல் துறை, ரயில்வே பணிகளில் 200 போலி மதிப்பெண் பட்டியல்கள்; அரசு தேர்வுகள் இயக்ககம் கண்டுபிடிப்பு: போலீசில் புகார் அளித்ததால் பரபரப்பு

சென்னை:  அஞ்சல் துறை, சிஆர்பிஎப்,  ரயில்வே  மற்றும் இந்தியன் ஆயில் நிறுவன பணிகளில் சேர்ந்தவர்கள்  கொடுத்த மதிப்பெண்கள் பட்டியல்களில் 200 பட்டியல்கள் போலியானவை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து, போலி மதிப்பெண் பட்டியல்களை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை குற்றத்தடுப்பு போலீசில், தேர்வுத்துறை சார்பில் புகார் கொடுத்துள்ளனர்.

தமிழகத்தில் செயல்படும் ஒன்றிய அரசு துறைகளான அஞ்சல் துறையில் தற்போது கிராம அஞ்சலக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.  தமிழ்தெரிந்த  மற்றும் தமிழ் படித்தவர்கள் மட்டுமே இந்த பணியில் சேர்க்கப்படுகின்றனர். மேலும், சிஆர்பிஎப், ரயில்வே,  இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் கடந்த 3 மாதங்களாக பணியாளர்கள்  தேர்வு செய்யப்பட்டு அமர்த்தும் பணி நடக்கிறது.

இதற்கான தேர்வுகளை ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.   சுமார் 2000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மேற்கண்ட நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களில் பெரும்பாலானவர்கள் வட மாநிலத்தில் இருந்து தேர்வானவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

பணியில் சேர்வதற்காக அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம்  வகுப்பு தேர்ச்சி என்று வைக்கப்பட்டு இருந்த நிலையில், மேற்கண்ட பணியில் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் கல்விச் சான்றுகளை அந்தந்த நிறுவனங்களில் ஒப்படைத்துள்ளனர். அந்த சான்றுகளில் சுமார் 200 பேர் கொடுத்திருந்த 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றுகளில் குளறுபடிகள் இருந்ததை மேற்கண்ட நிறுவனங்கள் கண்டுபிடித்து அதுகுறித்து சரிபார்க்க தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு மதிப்பெண் சான்றுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த மதிப்பெண் பட்டியல்களில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை கொடுத்ததாக சான்றுகளை சமர்ப்பித்துள்ளனர்.

ஆனால்,  அந்த மதிப்பெண் பட்டியல்களில் முதல் மொழிப் பாடமாக இந்தி என்று உள்ளது. மதிப்பெண் பட்டியல்களில் அந்த மாணவர்கள் இந்தியில் கையொப்பம் போட்டுள்ளனர். மேலும் மதிப்பெண் பட்டியல்களில் ஸ்டேட் கவர்மென்ட் போர்டு ஆப்  தமிழ்நாடு, ஸ்டேட் போர்டு  ஆப் தமிழ்நாடு, ஸ்டேட் போர்டு ஆப் ஹையர் செகண்டரி  எக்சாமினேஷன் என்ற பெயர்கள் மதிப்பெண் பட்டியல்களில் அச்சிட்டு இருந்தன. ஆனால், மாணவர்கள் சென்னையில் உள்ள பள்ளிகளில் படித்துள்ளதாக அச்சிடப்பட்டுள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த அஞ்சல் துறை அதிகாரிகள், அந்த மதிப்பெண் பட்டியல்களை சரிபார்த்து கொடுக்க வேண்டும் என்று தேர்வுத்துறைக்கு அனுப்பியுள்ளனர். அதேபோல சிஆர்பிஎப், இந்தியன் ஆயில் உள்ளிட்ட துறை அதிகாரிகளும் அனுப்பியுள்ளனர். அந்த வகையில், சுமார் 200 சான்றுகள் தேர்வுத்துறைக்கு வந்துள்ளன. அவற்றை சரிபார்த்த தேர்வுத்துறை அதிகாரிகள் அவை அனைத்தும் போலியானவை என்று கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, குற்றவியல் போலீசாருக்கு தேர்வுத்துறையின் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலியான மதிப்பெண் பட்டியல்கள் என்று தேர்வுத்துறை அளித்த அறிக்கையின்படி, சிஆர்பிஎப், ரயில்வே துறை, இந்தியன் ஆயில் துறைகளும் தற்போது போலி மதிப்பெண் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களிடம் விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த விசாரணைக்கு பிறகு போலி மதிப்பெண் பட்டியல்களை அச்சிட்டவர்கள் யார், இதன் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் யார் என்பதும் தெரியவரும்.

வடமாநிலத்தவர்கள் மூலம்...
கடந்த காலங்களில் போலி மதிப்பெண் பட்டியல்கள் தமிழ்நாட்டில் தயார் செய்து சிலர் வினியோகம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சம்பவங்களில் டிபிஐ வளாகத்தில் பணியாற்றிய சிலர் ஈடுபட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நடவடிக்கையை போலீசார் எடுத்தனர். அதற்கு பிறகு போலி மதிப்பெண் பட்டியல்கள் பிரச்னையே இல்லாமல் இருந்தது. தற்போது வட மாநிலத்தவர்கள் மூலம் போலி மதிப்பெண் பட்டியல்கள் தமிழகத்துக்குள் நுழைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Tags : State Examinations Directorate , 200 fake mark lists in postal and railway jobs; Discovery of the State Examinations Directorate: The commotion caused by filing a complaint with the police
× RELATED பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவு...