×

போலி ஜிஎஸ்டி ஆணையரை வைத்து தொழிலதிபரிடம் ரூ.1 கோடி பணம் பறிப்பு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் முக்கிய நிர்வாகி தணிகைவேல் உட்பட 2 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: போலி ஜிஎஸ்டி ஆணையரை வைத்து தொழிலதிபரிடம் ரூ.1 கோடி பணம் பறித்த வழக்கில் விசுவ இந்து பரிஷத் தென் சென்னை மாவட்ட செயலாளர் தணிகைவேல் உட்பட 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சந்தோஷ் நகரை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேசன்(50) என்பவர் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘ரம்யா அவுட் சோர்சிங் சொல்யூஷன் பிரவேட் லிமிடெட் என்ற பெயரில் மேன்பவர் அவுட்சோர்சிங் தொழில் செய்து வருகிறேன். எனது நிறுவனம் ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். கடந்த மார்ச் 2021ம் ஆண்டு ஜிஎஸ்டி சம்பந்தமாக சோதனை செய்ய சீனியர் அதிகாரிகள் வந்து எனது நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அதில் கடந்த 2017-18 மற்றும் 2019-20ம் நிதி ஆண்டில் ரூ.4.75 கோடி அளவிற்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கண்டுபிடித்தனர். பிறகு சட்டப்பிரிவு 70 ஜிஎஸ்டி ஆக்ட் 2017இன் படி அத்தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று என்னிடம் நோட்டீஸ் கொடுத்து சென்றனர்.

இதுகுறித்து எனது நிறுவன ஆடிட்டர் மோகன் பாபுவை அணுகிய போது, விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தென் சென்னை மாவட்ட இணை செயலாளராக உள்ள தணிகைவேல் என்பவர் அறிமுகமானார். அப்போது எனது நிலையை அறிந்து அவர், எனக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் பலர் தெரியும் என்றும் கூறினார். பிறகு எனக்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் கொடுத்த நோட்டீசை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதோடு இல்லாமல் வருமானவரித்துறை அலுவலகத்தில்ஜிஎஸ்டி ஆணையர் தீபக் கோத்தாரியை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறி கடந்த 22.3.2021ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு ேஹாட்டலில் சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறி என்னிடம் ரூ.1 கோடி பணம் பெற்றார். அவர் கூறிய படி நான் ரூ.1 கோடி பணத்தை பல்வேறு நாட்களில் கொடுத்தேன்.

பிறகு ஜிஎஸ்டி ஆணையர் தீபக் கோத்தாரி மற்றும் அவரது மகன் பிரசாத் கோத்தாரி ஆகியோரை சந்திக்க ஏற்பாடு செய்தார்.ஆனால், சொன்னப்படி ஜிஎஸ்டி அதிகாரிகள் கொடுத்த நோட்டீசை ரத்து செய்ய வில்லை. அநேரம் எனக்கு தொடர்ந்து ஜிஎஸ்டி நிறுவனத்தில் இருந்து நோட்டீஸ் வந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த நான் ஜிஎஸ்டி ஆணையர் தீபக் கோத்தாரிக்கு போன் செய்தேன். ஆனால் போன் வேலை செய்யவில்லை. இதுகுறித்து விசாரித்த போது தீபக் கோத்தாரி ஜிஎஸ்டி ஆணையர் இல்லை என்றும் போலியான நபர் என தெரியவந்தது.

இதனால் நான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தணிகைவேலிடம் கேட்ட போது அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. எனவே ஜிஎஸ்டி ஆணையர் என்று போலியான நபரை அறிமுகம் செய்து ரூ.1 கோடி மோசடி செய்த தணிகைவேல் மற்றும் மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தொழிலதிபர் வெங்கடேசனிடம் அதிகளவில் பணம் இருப்பதை அறிந்து கொண்ட விசுவ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த தணிகைவேல் பணம் பறிக்கும் நோக்கத்துடன் ஜிஎஸ்டி ஆணையர் போல் வடமாநில நபர் ஒருவரை ஏற்பாடு செய்து அவரை நட்சத்திர ஓட்டலில் சந்திக்க வைத்து நூதன முறையில் ரூ.1 கோடி பணத்தை பறித்து மோசடி செய்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, விஷவ இந்து பரிஷத் தென் சென்னை மாவட்ட இணை செயலாளராக உள்ள நங்கநல்லூர் நேரு நகர் 6வது தெருவை சேர்ந்து தணிகைவேல்(47) மற்றும் கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த மோசடி நபர் தீபக் கோத்தாரி(48), அவரது மகன் பிரசாத் கோத்தாரி ஆகிய 3 பேர் மீது ஐபிசி 406, 420 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பிறகு முக்கிய குற்றவாளியான தணிகைவேல் மற்றும் தீபக் கோத்தாரி ஆகிய 2 பேரை அதிரடியாக நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி ஜிஎஸ்டி ஆணையர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பிரசாத் கோத்தாரியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். விசுவ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த தணிகைவேல் பணம் பறிக்கும் நோக்கத்துடன் ஜிஎஸ்டி ஆணையர் போல் வடமாநில நபர் ஒருவரை ஏற்பாடு செய்தார்.

Tags : Visva-Hindu Parishad ,Thanigaivel ,Central Crime Branch , 2 arrested for extorting Rs 1 crore from businessman with fake GST commissioner, including Thanikaivel, chief executive of Visva-Hindu Parishad
× RELATED பெங்களூரு போதை டான்ஸ் வழக்கு;...