×

டிடிவி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் வழக்கின் முக்கிய சாட்சியான வக்கீல் கோபிநாத் தற்கொலை

* சென்னை அருகே குடிசை வீட்டில் சடலம் மீட்பு
* அமலாக்கத்துறை டெல்லிக்கு அழைத்த நிலையில் திடீர் திருப்பம்
* தற்கொலைக்கு தூண்டியது யார் என போலீசார் விசாரணை

சென்னை: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் பெற்ற விவகாரத்தில் டிடிவி.தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், திடீர் திருப்பமாக வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட வழக்கறிஞர் கோபிநாத் சென்னை அருகே வீட்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார் கடைசியாக அவரிடம் பேசிய நபர்கள் யார் என்று கண்டறிய செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இறந்த பிறகு, அதிமுக சசிகலா அணி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டாக உடைந்தது. ஜெயலலிதா இறந்ததால் அவர் வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.

அப்போது சசிகலா தரப்பில் டிடிவி.தினகரன் வேட்பாளராகவும், ஓ.பன்னீர்செல்வம் அணியில் அவைத்தலைவர் மதுசூதனன் வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டனர். இரு அணிகளும் தேர்தலில் போட்டிட அதிமுக சின்னமான ‘இரட்டை இலை’ சின்னம் தங்களுக்குதான் என்று தெரிவித்தனர். இதனால் இந்திய தேர்தல் ஆணையம் 2 பேருக்கும் இரட்டை இலையை ஒதுக்காமல் கட்சியின் சின்னத்தை முடக்கியது. எனவே, இரண்டு அணிகள் சார்பிலும் இந்திய தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் பெற மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே இரட்டை இலை சின்னம் பெற சசிகலா அணியில் உள்ள டிடிவி.தினகரன் தரப்பில் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இரட்டை இலை சின்னத்தை பெற முயற்சி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இடைத்தரகர் சுகேஷ் சுந்திரசேகர் இரட்டை இலை சின்னம் பெற டிடிவி.தினகரன் தரப்பிடம் ரூ.50 கோடி கேட்டதாகவும், முதற்கட்டமாக ரூ.2 கோடி பணத்தை டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வைத்து கொடுக்கும் போது கையும் களவுமாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ரூ.2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை தற்போது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை இந்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், டிடிவி.தினகரன், வழக்கறிஞர் மோகன்ராஜ் உள்ளிட்டவர்களை முக்கிய குற்றவாளியாக சேர்த்தது. அதேநேரம், இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி பணம் பேசப்பட்டு ரூ.2 கோடி பணம் கொடுக்கும் போது சம்பவ இடத்தில் நேரில் இருந்ததாகவும், அதை நேரில் பார்த்ததாக மோகன் ராஜ்  ஜூனியரான வழக்கறிஞர் கோபிநாத் கூறியதின் அடிப்படையில் வழக்கின் முக்கிய சாட்சியாக அமலாக்கத்துறை சேர்த்திருந்தது.

அதைதொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2017ம் ஆண்டு சுகேஷ் சந்திரசேகர் மற்றும் டிடிவி.தினகரன் மற்றும் வழக்கறிஞர் மோகன்ராஜ், அவரது ஜூனியர் கோபிநாத் உள்ளிட்டவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வழக்கின் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதைதொடர்ந்து டிடிவி.தினகரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் டிடிவி.தினகரன் மற்றும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் வெளியே வந்தனர்.

இந்நிலையில் அமலாக்கத்துறையில் உள்ள இந்த வழக்கு தற்போது முக்கிய கட்டத்தை நெருங்கியுள்ளது. வழக்கில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியதால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியாக கருத்தப்படும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதற்கிடையே இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை நாளை (8ம் தேதி) தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும் படி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் கிடைத்தால் ஆஜராவேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் மோகனராஜிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து முக்கிய சாட்சியாக கருதப்படும் வழக்கறிஞர் கோபிநாத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் செல்போனில் தொடர்பு கொண்டு தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆஜராகும்படி அழைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் வழக்கறிஞர் கோபிநாத் நேற்று முன்தினம் வீட்டில் உள்ளவர்களிடம் யாரிடமும் சரியாக பேசாமல் ஏதோ யோசனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் சென்னை அடுத்த திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியில் வசித்து வரும் வழக்கறிஞர் கோபிநாத் நேற்று முன்தினம் இரவு வீட்டின் எதிரே உள்ள குடிசை வீட்டில் தூங்கப்போவதாக கூறி சென்றுள்ளார். பிறகு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வீட்டில் உள்ளவர்கள் பார்த்த போது கோபிநாத் குடிசை வீட்டில் நைலான் கயிற்றால் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த போலீசார் கோபிநாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கோபிநாத் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் முக்கிய சாட்சியாக கூறப்படும் கோபிநாத் என்பதால், அவரிடம் கடைசியாக பேசிய நபர்கள் யார், தற்கொலைக்கு செய்து கொள்ளும் அளவிற்கு யாரேனும் தூண்டினார்களா, பணி முடிந்து வீட்டிற்கு எப்போது வந்தார். இரவு எத்தனை மணிக்கு தூங்க சென்றார். கடைசியாக கோபிநாத்தை பார்த்த நபர்கள் யார் என்பது குறித்து கோபிநாத் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் முக்கிய சாட்சியாக கூறப்படும் வழக்கறிஞர் கோபிநாத் சந்தேகத்திற்கு இடமான வகையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* யார் இந்த கோபிநாத்?
திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியில் தனது குடும்பத்துடன் கோபிநாத் (31) வசித்து வந்தார். சட்டம் படித்த அவர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். உயர் நீதிமன்றத்தின் மூத்த வக்கீல் ராமாபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரிடம் ஜூனியராக பணியாற்றி வந்தார். அரசியலில் ஈடுபாடு கொண்ட அவர், திருவேற்காடு பகுதி பாமக செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

Tags : Gopinath ,DTV ,Dinakaran , Gopinath, a key witness in the case, committed suicide after the enforcement department summoned DTV Dinakaran.
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி