நாகர்கோவிலில் விழிப்புணர்வு ஏற்படுத்த வாகன சோதனை நடத்தி இலவசமாக ஹெல்மெட் வழங்கிய எஸ்.பி-தவறுக்கு மன்னிப்பு கோரிய இளம்பெண்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் திடீரென வாகன சோதனை நடத்தி ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டி வந்தவர்களுக்கு எஸ்.பி. அறிவுரை வழங்கி,  இலவசமாக ஹெல்மெட் வழங்கினார்.

குமரி மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்கும் வகையில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். குறிப்பாக ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டி வந்து அபராதம் கட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஹெல்மெட் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட வேண்டும் என்றும் எஸ்.பி.  ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை திடீரென எஸ்.பி.யே நேரடியாக விழிப்புணர்வு பிரசாரத்தில் இறங்கினார். வடசேரி அண்ணா சிலை சந்திப்புக்கு வந்த அவர், அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு பைக்குகளில் ஹெல்மெட் இல்லாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கினார். ஹெல்மெட் அவசியத்தை உணர்ந்து கொள்ளுங்கள். நீதிமன்ற உத்தரவுப்படி பைக்குகளில் செல்லும் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். தலைக்காய விபத்துக்களால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே பைக்குகளில் செல்லும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணியுங்கள் என்றார்.

 எஸ்.பி. சோதனை நடத்திய போது இளம்பெண்கள் இருவர் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர்களில் வந்தனர். எஸ்.பி., அவர்களை தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கினார். அப்போது எஸ்.பி.யிடம், தவறுக்கு மன்னிப்பு கோரிய இளம்பெண்கள், இனி கண்டிப்பாக ஹெல்மெட் அணிவோம். இது தொடர்பாக நாங்களே விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்றனர். அவர்களுக்கு எஸ்.பி. இலவசமாக ஹெல்மெட் வழங்கினார்.

மொத்தம் 10 பேருக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. நவீன்குமார், டிராபிக் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே நாகர்கோவிலில் சாலை ஓரங்களில் கேட்பாரற்று நிற்கும் கார்கள், வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள். அந்த வகையில் நாகர்கோவில் ராமன்புதூரில் நேற்று இரு கார்களை டிராபிக் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: