×

நாகர்கோவில் பஸ் நிலையங்களில் புறக்காவல் நிலையம், கேமராக்கள் செயல்பட தொடங்கின-போலீசார் கண்காணிக்கவும் உத்தரவு

நாகர்கோவில் : நாகர்கோவில் வடசேரி, மீனாட்சிபுரம் பஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட தொடங்கி உள்ளன. கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீஸ் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.நாகர்கோவிலில் உள்ள மீனாட்சிபுரம் பஸ் நிலையம் மற்றும் வடசேரி பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. இந்த கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்த நிலையில் இருந்தன. பஸ் நிலைய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் இருந்தது, குற்ற செயல்களில் ஈடுபடுகிறவர்களை கண்டுபிடிப்பதில் சிக்கலை ஏற்படுத்தியது. எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் கவனத்துக்கு இந்த பிரச்னை கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக அவர் கண்காணிப்பு கேமராக்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்ெகாண்டார்.

அதன்படி தற்போது மீனாட்சிபுரம் பஸ் நிலையம் மற்றும் வடசேரி பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட தொடங்கி உள்ளன. அது மட்டுமின்றி அண்ணா பஸ் நிலையம் மற்றும் வடசேரி பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் இருந்ததால், அங்கு அமைக்கப்பட்டு இருந்த புறக்காவல் நிலைய கட்டுப்பாட்டு அறையும் இயங்காமல் இருந்தது. தற்போது கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட தொடங்கியதை ெதாடர்ந்து ரோந்து போலீசார் சுழற்சி முறையில், புறக்காவல் நிலைய கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருக்க வேண்டும் என எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் காலை முதல் இரவு வரை கட்டுப்பாட்டு அறையில் போலீஸ்காரர் ஒருவர் இருந்து கேமராக்களை கண்காணித்து வருகிறார்.

இதற்கிடையே சமீபத்தில் அண்ணா பஸ் நிலையம் மற்றும் வடசேரி பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மேயர் மகேஷ், பஸ் நிலையங்கள் மற்றும் மாநகர பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கமான்ட் அன்ட் கவரேஜ் அறை அமைக்கப்படும். மாநகராட்சி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் முழுமையாக இயங்கும் வகையில் பணிகள் மேற்ெகாள்ள ₹75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றார். தற்போது இதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்கி உள்ளது. நாகர்கோவில் மாநகரில் தனியார் குடியிருப்பு பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் வகையில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

காவல் நிலையங்களில் ரோல்கால் கட்டாயம்

குமரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கண்டிப்பாக காலையில் ரோல்கால் நடத்த வேண்டும். இன்ஸ்பெக்டர் இல்லாத பட்சத்தில், எஸ்.ஐ. தலைமையில் நடத்தப்பட வேண்டும். ரோந்து பணி, இரவு நேர பணி மற்றும் பிற பணிகளுக்கு சென்ற காவலர்கள் தவிர, காவல் நிலையத்தில் இருக்கிற போலீசார் இந்த ரோல்கால் நிகழ்வில் பங்கேற்க வேண்டும். அன்றைய தினம் நடைமுறை தொடர்பாக இதில் அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும் என எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

அதன் பேரில் தற்போது குமரி மாவட்டத்தில் உள்ள 37 காவல் நிலையங்களிலும் ரோல்கால்  நடந்து வருகிறது. கஞ்சா, புகையிலை, திருட்டு மது விற்பனை தொடர்பாக 2.0 என்ற பெயரில் தமிழகம் முழுவதும் அதிரடி ரெய்டு நடக்கிறது. குமரி மாவட்டத்திலும் இது தொடர்பாக அதிகளவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ரோல்கால் நிகழ்வில் விவாதிக்கப்படுகிறது. மேலும் காவல் நிலையங்களுக்கு வருபவர்களிடம் போலீசார் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

Tags : Nagargo , Nagercoil: Surveillance cameras have started functioning at Nagercoil Vadacherry and Meenatchipuram bus stands. In the control room
× RELATED சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத்...