விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி சாலையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட வேகத்தடையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விழுப்புரம் : விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் கல்லூரி சாலையில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாதா கோயில் பஸ் நிறுத்தத்திலிருந்து கீழ்பெரும்பாக்கம் கல்லூரி வரை உள்ள சாலையானது ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. இந்த சாலையை கடந்த 50 ஆண்டுகளாக சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த டாக்டர்.

லட்சுமணன் முயற்சியால் இப்பகுதிக்கு தார்சாலை அமைக்கப்பட்டது. பின்னர் இந்த தார்சாலையில் அப்பகுதி பொதுமக்களே எந்தவித முன் அனுமதியுமின்றி 8 இடங்களில் உயரமான வேகத்தடைகளை அமைத்துள்ளனர். இதற்கிடையே கடந்த சட்டமன்ற தேர்தலில் கீழ்பெரும்பாக்கம் பொதுமக்கள் இப்பகுதிக்கு மினிபேருந்து இயக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தினர். விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினரான லட்சுமணன் முயற்சியால் கீழ்பெரும்பாக்கம் மற்றும் சின்னமடம் ஆகிய இரு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட மினி பேருந்துகள் இத்தடம் வழியாக இயக்கப்பட்டன.

கல்லூரி சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்பட்ட போது இங்குள்ள வேகத்தடைகளின் காரணமாக பேருந்தின் ஸ்பிரிங்குகள் அடிக்கடி பழுதடைந்ததன் காரணமாக இவ்வழியாக பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என நிர்வாகம் அறிவித்தது. இவ்வழியாக இயக்கப்பட்ட பேருந்துகள் தற்போது வீட்டுவசதி குடியிருப்பு வழியாக இயக்கப்படுகிறது. மேலும் இந்த வேகத்தடையால் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி இரவு நேரங்களில் வேகத்தடை இருப்பதை அறியாமல் வரும் பொதுமக்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே மீண்டும் இந்த வழியில் மினி பேருந்துகளை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதுடன் மட்டுமின்றி, இதற்கு தடையாக உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டுமெனவும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: