திருவண்ணாமலை மாவட்டத்தில் குறைதீர்வு கூட்டம் யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

திருவண்ணாமலை பிடிஓ அலுவலகத்தில் நேற்று தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆர்டிஓ வெற்றிவேல் தலைமையில் நடந்தது. அதில் தாசில்தார் சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.அப்போது, விவசாயிகள் தரப்பில் தெரிவித்த கோரிக்கைகள் மற்றும் குறைகள் விபரம்:

திருவண்ணாமலை பகுதியில் யூரியா தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. தனியார் உர கடைகளில் யூரியாவை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்கின்றனர். விவசாயிகளுக்கு அவசியமில்லாத இணை உரங்களை வாங்கினால்தான் யூரியா கிடைக்கும் என நெருக்கடி தருகின்றனர். கூட்டுறவு சங்கங்களிலும் முறையாக யூரியா வழங்குவதில்லை. ஒரு சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய அங்குள்ள ஊழியர்கள் மூட்டைக்கு ₹10 முதல் 20 வீதம் வசூலிக்கின்றனர். எனவே, தவறு செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் நிறுவனம், அதற்கான நியாயமான இழப்பீடு ெதாகையை வழங்க வேண்டும். இழப்பீடு வழங்குவதில் பாகுபாடு காட்டக்கூடாது. ஒரே கிராமத்தில் ஒரு விவசாயிக்கு கூடுதல் இழப்பீடும், மற்றொரு விவசாயிக்கு குறைந்த இழப்பீடும் வழங்குகின்றனர்.

நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். ஏரி நீர்பிடிப்பு பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. அதை அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்ற வேண்டும் என்றனர். மேலும், யூரியா தட்டுப்பாட்டை கண்டித்து ஒரு சில விவசாயிகள் மட்டும் கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.கலசபாக்கம்: கலசபாக்கம் அடுத்த ெதன்பள்ளிப்பட்டில் உள்ள வேளாண்மை விரிவாக்க அலுவலக மையத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் உதவி இயக்குனர்(ஊராட்சிகள்)லட்சுமி நரசிம்மன் தலைமையில் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் செல்வராஜ், பிடிஓ பிரித்திவிராஜ், தாசில்தார் உதயகுமார் முன்னிலை வகித்தனர். வேளாண் அலுவலர் பழனி வரவேற்றார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், ‘வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எங்களுக்கு முழுமையாக தெரியவில்லை. திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்க வேண்டும். சாகுபடி செய்யும் பயிர்களில் நோய் தாக்குதல் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்படுகிறோம். இதுகுறித்து அதிகாரிகள் ஆலோசனை வழங்க வேண்டும்.

மேல்சோழங்குப்பம் கிராமத்தில் இருந்து கலசபாக்கம் வரை அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர். இதற்கு, துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில், சமூகப்பாதுகாப்பு தாசில்தார் மலர்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரன் தலைமையில் நடந்தது.

மாவட்ட நேர்முக துணை ஆட்சியர் குமரன், சமூகநல வட்டாட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றனர். இதில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்று குறைகளை தெரிவித்தனர். தொடர்ந்து, விவசாயிகள் பேசுகையில், ‘நாங்கள் அளிக்கும் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயிகளுக்கு யூரியா தட்டுப்பாடு உடனே நீக்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்’ என்றனர். இதில் பிடிஓ சம்பத் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 போளூர்: போளூர் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. தாசில்தார் சண்முகம், பேரூராட்சி செயல் அலுவலர் முகம்மத்ரிஜ்வான், உதவி வேளாண்மை அலுவலர் ராமு ஆகியோர் கலந்து கொண்டனர். யூரியா தட்டுப்பாட்டை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, விவசாயிகள் பேசுகையில், ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகளவு யூரியா தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடைக்காரர்கள் தங்கள் வீடுகளில் பதுக்கி விற்கின்றனர். விதிகளை மீறிய 7 கடைகளுக்கு சீல் வைத்ததாக அதிகாரிகள் கூறினர். பின்னர், விவசாயிகள் கலைந்து சென்றதால் குறைதீர்வு கூட்டம் நடக்கவில்லை.

வந்தவாசி: வந்தவாசி அடுத்த பிருதூரில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் கீதாலட்சுமி தலைமை தாங்கினார். அப்போது, விவசாயிகள் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், உழவர் பேரவை மாவட்ட தலைவர் ரிஸ்வான், பாட்டாளி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ், தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆரணி:ஆரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் நுதனமுறையில் நேற்று ஆர்ப்பாட்டம்  நடந்தது. விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் புருஷேத்தமன் தலைமை தாங்கினார். இதில், மாவட்டம் முழுவதும் யூரியா தட்டுப்பாட்டை போக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். யூரியா தங்கு தடையின்றி அரசு நிர்ணயித்த விலையில் உரம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியப்பாடி, அம்மாப்பாளையம், ராட்டிணமங்கலம், திருமணி ஆகிய பகுதிகளில் கூடுதலாக நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்யாறு: செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம் கிராம சமுதாய கூடத்தில் மாதாந்திர விவசாய குறைதீர்வு கூட்டம் ஆர்டிஓ விஜயராஜ் தலைமையில் நடந்தது. வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பங்கேற்ற விவசாயிகள் டிபிசி திறக்க வலியுறுத்தி விவசாயிகள் கருப்பு கொடி அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பெருங்களத்தூர், வெம்பாக்கம், வெங்களத்தூர், தென்னம்பட்டு ஆகிய இடங்களில் டிபிசி திறக்க கலெக்டர் உத்தரவிட்டும் செயல்படுத்தவில்லை என்றனர். கலெக்டர் உத்தரவிட்டுள்ள பகுதிகளில் விரைவில் டிபிசி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ தெரிவித்தார்.

Related Stories: