மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை... அடிபணிந்த கோத்தபய ராஜபக்சே.. இலங்கையில் அவசர நிலை பிரகடனம் வாபஸ்

கொழும்பு : இலங்கையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறையில் இருந்து வந்த அவசரநிலை அந்நாட்டு பொதுமக்களின் கடும் கொந்தளிப்பு காரணமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், மகிந்த ராஜபக்சேவின் பிரதமர் அவையில் இருந்து அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துவிட்டதால் எந்த நேரத்திலும் மகிந்த ராஜபக்சேவின் ஆட்சி கவிழும் என்பது உறுதியாகி உள்ளது. பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தும் எதிர்க்கட்சிகள் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. மறுபுறத்தில் அதிபர் பதவியில் இருந்து விலக முடியாது கோத்தபய ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 இதனிடையே அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி வீதிகளில் இறங்கி மக்கள் போராடி வருகின்றனர். மேலும் இலங்கை அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் திரண்ட தமிழ் மற்றும் சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக ஆவேச கோஷங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் பல இடங்களில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் எங்கு பார்த்தாலும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆகவே மக்களின் போராட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவசர நிலை மூலம் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை, மாறாக எதிர்ப்புதான் அதிகரிக்கிறது என்பதால் அதை கோத்தபய ராஜபக்சே வாபஸ் வாங்கியுள்ளார். கடந்த 1ம் தேதி அமலில் இருந்த நெருக்கடி நிலை ரத்து செய்யப்படுவதாக இலங்கை அதிபர் அறிவித்துள்ளார். நேற்று இரவே இந்த அவசர நிலை வாபஸ் உடனடியாக அமலுக்கு வந்தது.

Related Stories: