2வது மாடியில் இருந்து விழுந்து வாலிபர் படுகாயம்: தொடையில் குத்தி மறுபுறம் வந்த கம்பி

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே  பொடவூர் கிராமத்தில்  2 அடுக்கு கட்டிடம் கட்டப்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டது. அங்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரேம் (27) காவலாளியாக வேலை பார்க்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் பிரேம், தனது பணியை முடித்து 2வது மாடியில் தூங்கினார். அப்போது,  தூக்க கலக்கத்தில் எதிர்பாராத விதமாக அவர் உருண்டுள்ளார். இதில்,   2வது மாடியில் இருந்து கீழே  விழுந்தபோது, முதல் மாடியில் நீட்டி கொண்டிருந்த கட்டுமான கம்பி, பிரேமின் இடது கால் தொடையின் ஒரு புறம் குத்தி  மறுபுறம்  வெளியேறியது.   

அவர் அந்தரத்தில்  தலைக்கீழாக தொங்கியபடி அலறி துடிதுடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். தகவலறிந்து பெரும்புதூர்  தீயணைப்பு மீட்பு படையினர், சம்பவ இடத்துக்கு சென்று பல  மணிநேரம் போராடி, கட்டர் இயந்திரம் மூலம், அவரது தொடையில் குத்திய கம்பியை துண்டித்து பிரேமை பத்திரமாக மீட்டனர். பின்னர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரேம்மின் தொடையில் குத்தியிருந்த கம்பியை  அப்புறப்படுத்தினர். புகாரின்படி சுங்குவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: