சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் பீஸ்ட் தெலுங்கு டிரைலர் வெளியீடு: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் தெலுங்கு டிரைலர் நேற்று வெளியானது. சன் பிக்சர்ஸ் சார்பில் சன் டிவி நெட்வொர்க் தலைவர்  கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரித்துள்ள படம், பீஸ்ட். இதில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். யோகி பாபு, இயக்குனர் செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசை அமைத்துள்ளார்.

சர்கார் படத்துக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பீஸ்ட் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் 13ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த 2ம் தேதி பீஸ்ட் படத்தின் தமிழ் டிரைலர் வெளியிடப்பட்டது. யுடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ள இந்த டிரைலருக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், நேற்று இப்படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியிடப்பட்டது. இதையடுத்து ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த ரசிகர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. அவர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய ‘அரபிக்குத்து’ என்ற பாடலும், கு.கார்த்திக் எழுதி விஜய் பாடிய ‘ஜாலியோ ஜிம்கானா’ என்ற பாடலும் சமூக வலைத்தளங்கள் மற்றும் யுடியூப்பில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: